வந்த இடத்தில் வயிறு சரியில்லை.. ஒரே நேரத்தில் 10 தெ. ஆப்பிரிக்க வீரர்கள் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: சென்னைக்கு போட்டிகளில் விளையாட வந்த தென் ஆப்பிரிக்க ஏ அணியின் 10 வீரர்களுக்கு ஒரே சமயத்தில் காயம், வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொறுமல், அஜீரணம் என பிரச்சினை வந்ததைத் தொடர்ந்து 10 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப் பேருக்கு புட் பாய்சனால் வயிறு பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா ஏ, தென் ஆப்பிரிக்கா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்புத் தொடர் சென்னையில் நடந்து வருகிறது. இதற்காக வந்த இடத்தில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்களுக்குப் பெரும் சிக்கலாகி விட்டது.

இந்தியா போட்டியில் பாதிப்பு
நேற்று இந்தியா ஏ, தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையே நடந்த ஒரு நாள் போட்டியின்போதே பாதி வீரர்களுக்கு வயிறு சரியில்லாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். தொடக்க ஆட்டக்காரர் குவின்டன் டி காக் சதம் அடித்த நிலையில் 108 ரன்களுடன் பாதியேலேயே வெளியேறினார்.

பீல்டிங் செய்யக் கூட ஆள் இல்லை
ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியில் பீல்டிங் செய்யக் கூட ஆள் இல்லாத நி்லை ஏற்பட்டது. யார் யாரோ வந்து பீல்டிங்கில் குதித்தனர். ஏன் இந்திய வீரரே ஒருவர் தென் ஆப்பிரிக்காவுக்காக பீல்டிங் செய்ய நேரிட்டது.

பீல்டிங் செய்த வீடியோ அனாலிஸ்ட்
தென் ஆப்பிரிக்க அணியின் வீடியோ அனாலிஸ்ட் ஹெண்டிரிக்ஸ் கோயர்ட்சன் கூட பீல்டிங் செய்யும் நிலையும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

10 பேருக்குப் பாதிப்பு
இந்தியா வந்துள்ள 16 பேர் கொண்ட அணியில் தற்போது 10 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், ஜோன்டோ, தோகோசிசி, குவின்டன் டி காக் உள்ளிட்டோர் சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர்.

இன்றைய போட்டி ரத்து
இன்று தென் ஆப்பிரிக்காவு்க்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டி நடைபெற வேண்டும். ஆனால் நிலைமை சரியில்லாததால், தென் ஆப்பிரிக்காவுக்குப் பதில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன.


Click it and Unblock the Notifications