உலகின் டாப் 100 விளையாட்டு வீரர்கள்.... 11 பேர் இந்தியர்கள்.... யார் யார் தெரியுமா!
டெல்லி: உலகில் மிகவும் பிரபலமான டாப் 100 விளையாட்டு வீரர்களில், 11 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இதில் 9 பேர் கிரிக்கெட் வீரர்கள். டாப் 100ல் கிரிக்கெட் வீரர்கள் 10 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். அதில் 9 பேர் இந்தியர்கள் என்பது இந்திய கிரிக்கெட் உலகெங்கும் எவ்வளவு பிரபலமாக உள்ளது என்பதை காட்டுகிறது.
இஎஸ்பிஎன் நிறுவனம், உலகின் டாப் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்கு மூன்று அடிப்படை தகுதிகள் மட்டுமே தேவை. ஒன்று கூகுளில் தேடப்படுவது தொடர்பான மதிப்பெண், சமூக தளங்களில் அவர்களை எத்தனைப் பேர் பின் தொடர்கிறார்கள், மூன்றாவது, விளம்பரங்கள் மூலம் அவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள். இந்த மூன்று அம்சங்களின் அடிப்படையில், பல்வேறு விளையாட்டைச் சேர்ந்த வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் 9 பேர் கிரிக்கெட் வீரர்கள். கேப்டன் விராட் கோஹ்லி 11வது இடத்தில் உள்ளார். கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி 20வது இடத்தில் உள்ளார்.
டென்னிஸ் பிரபலங்கள் செரீனா வில்லியம்ஸ் (12), நோவாக் ஜோகோவிச் (13) ஆகியோரைவிட கோஹ்லி முன்னிலையில் உள்ளார். அதே நேரத்தில் மரிய ஷரபோவா, மேசடு ஓசில் ஆகியோருக்கு முன்னதாக தோனி உள்ளார்.
உலகப் பட்டியலில் ரோஹித் சர்மா 30, சுரேஷ் ரெய்னா 41, யுவராஜ் சிங் 57, ரவிச்சந்திரன் அஸ்வின் 71, ஹர்பஜன் சிங் 80, கவுதம் கம்பீர் 83, ஷிகார் தவன் 94வது இடங்களில் உள்ளனர். பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் 50வது இடத்திலும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 100வது இடத்திலும் உள்ளனர்.
இந்தப் பட்டியலில் போர்ச்சுகல்லின் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். என்பிஏ ஸ்டாரான கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ், பார்சிலோனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி அதற்கடுத்த இடங்களில் உள்ளனர். நெய்மர், ரோஜர் பெடரர், டைகர் வுட்ஸ், கெவின் டுராண்ட், ரபேல் நடால், ஸ்டீபன் கர்ரி, பில் மிக்கல்சன் ஆகியோர் டாப் 10ல் உள்ளனர்.
இந்தப் பட்டியில் இந்தியர்களைத் தவிர இடம்பெற்றுள்ள ஒரே கிரிக்கெட் வீரர், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ்,. அவர் 99வது இடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications