“8 வது படிக்கிற பையன் ஐபிஎல் ஆடுறான்”.. கூகுள் CEO சுந்தர் பிச்சை வெளியிட்ட அதிரடி பதிவு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 14 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவம்சி நேற்று ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். அவரது அதிரடி ஆட்டத்தைப் பார்த்து பலரும் தங்களது வியப்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் ஒருவர். அவரும் தனது வியப்பை ட்விட்டர் சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
வைபவ் சூர்யவம்சி நேற்று தனது ஐபிஎல் தொடர் அறிமுகப் போட்டியில், தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். அதன் பிறகு 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடங்கும். 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில், எய்டன் மார்க்ரம் வீசிய பந்தில் ரிஷப் பண்ட் மூலம் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ஆட்டமிழந்து வெளியேறிய போது, அவர் அழுதபடி சென்றார்.

ஆனால் அவரது இந்த ஆட்டமே பலரையும் வியப்புக்கு உள்ளாக்கியுள்ளது. 14 வயதில் எந்தவிதமான பயமும் இன்றி அவர் அனைத்து முன்னணி பந்துவீச்சாளர்களையும் எதிர்கொண்டு அதிரடியாக ஆடியதை பலரும் சுட்டிக்காட்டி பாராட்டி வருகின்றனர்.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள பதிவில், "இன்று நான் அதிகாலை எழுந்து எட்டாவது படிக்கும் சிறுவன் ஐபிஎல் விளையாடுவதைப் பார்த்தேன். என்ன மாதிரியான அறிமுகம் இது!" எனத் தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கிரிக்கெட் வர்ணனையாளர் ஆன ஹர்ஷா போக்லே வெளியிட்டுள்ள பதிவில், "உங்களுக்கு எத்தனை வயதாகிறது என்பது முக்கியமில்லை. வைபவ் சூர்யவம்சி இந்த பெரிய மாலை வேளையில் மேடை பயத்தை வெளிப்படுத்தவில்லை" என்று கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள பதிவில், "14 வயதில் பேட்டிங் செய்ய வந்துவிட்டார்! இளம் வைபவ் சூர்யவம்சிக்கு மிகப்பெரிய விசில் அடிப்போம்!" எனக் குறிப்பிட்டுள்ளது.
பல ரசிகர்களும் இவர் எதிர்காலத்தில் இந்திய அணிக்காக விளையாடுவார் எனக் கூறி வருகின்றனர். சிலரோ சச்சினைப் போலவே இவர் 16 வயதிலேயே இந்திய அணிக்காக விளையாடுவார் எனக் கூறி வருகின்றனர்.
வைபவ் சூர்யவம்சி 34 ரன்கள் எடுத்த போதிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்தப் போட்டியில் சேஸிங்கில் கடைசி ஓவர் வரை போராடி 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications