வயசு 15..! பிறந்தது அரியானா.. சச்சின் பரம விசிறி..! தென் ஆப்ரிக்கா தொடரில் சேர்க்கப்பட்ட புதுமுகம்
மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில், 15 வயதே நிரம்பிய சச்சின் டெண்டுல்கரின் பரம ரசிகை ஷபாலி வர்மா இடம்பிடித்துள்ளார்.
தென் ஆப்ரிக்க மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி 20 போட்டிகளிலும் 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடுகிறது. முதலாவது டி 20 போட்டி வரும் 24ம் தேதி சூரத்தில் நடைபெறுகிறது.
ஒரு நாள் தொடர் அக்டோபர் 9ம் தேதி முதல் நடக்கிறது. அந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் பல ஆச்சரியங்கள் கலந்திருக்கின்றன. ஒரு நாள் அணிக்கு கேப்டனாக மிதாலி ராஜ் நீடிக்கிறார்.

15 வயது வீராங்கனை
டி 20 கிரிக்கெட்டில் இருந்து மிதாலி ஓய்வை அறிவித்து விட்டதால், 15 வயதான இளம் வீராங்கனை, ஷபாலி வர்மா என்பவர் அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் அரியானாவைச் சேர்ந்தவர்.

டி 20ல் கலக்கியவர்
கடந்த மே மாதம் நடந்த மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக ஆடியவர். ஜெய்ப்பூரில் புதன்கிழமை நடந்த டி20 போட்டியில் அடித்து நொறுக்கினார். அதற்கு எல்லாம் சிகரம் வைத்தார் போல, இப்போது அவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

128 ரன்கள் விளாசல்
கடந்த பிப்ரவரி மாதம் நாகலாந்துக்கு எதிரான போட்டியில், 56 பந்தில் 128 ரன்கள் விளாசி சாதனை படைத்திருந்தார் ஷபாலி. அப்போதே அவர் ஆட்டத்தின் மீது தேர்வாளர்களின் பார்வை பதிந்தது. ஷபாலி அளித்த பேட்டியில், சச்சின் தான் எனக்கு பிடித்த வீரர். அவர்தான் என் ரோல் மாடலும் கூட என்று கூறியிருந்தார்.

யார்? யார்?
ஒரு நாள் போட்டிக்கான அணி: மிதாலிராஜ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (துணை கேப்டன்), பூனம் ரவுத், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, தானியா பாட்டியா, ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, மன்சி ஜோஷி, எக்தா பிஷ்ட், பூனம் யாதவ், ஹேமலதா, ராஜேஸ்வரி கெய்க்வாட், பிரியா பூனியா.

டி 20 அணி
முதல் 3 டி 20 போட்டிக்கான அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா (துணை கேப்டன்), ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, தானியா பாட்டியா, பூனம் யாதவ், ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்ட்ராகர், ராதா யாதவ், வேதா கிருஷ்ண மூர்த்தி, ஹர்லீன் டியோல், அனுஜா பட்டில், ஷபாலி வர்மா, மன்சி ஜோஷி.


Click it and Unblock the Notifications