
ஆரம்பத்திலேயே திணறல்
அணியின் ஸ்கோர் 2 ஓவர்களில் 3 ரன்களாக இருந்தபோது, குசால் பெரேரா 3 ரன்களில் கைல் அப்பாட் பந்து வீச்சில், விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

நடுவரிசையிலும் தடுமாற்றம்
இதனால் தில்ஷனுடன், சங்ககாரா ஜோடி சேர்ந்தார். ஆனால், தில்ஷனோ, 7 பந்துகளை சந்தித்த நிலையில், டேல் ஸ்டெயினின் அற்புதமான பந்தில், ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த டுப்ளிசிசிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். இதன்பிறகு திரிமன்னே சற்று அதிரடியாக ஆடத் தொடங்கினார். மறுமுனையில், சங்ககாராவோ நிதான ஆட்டத்தை கையாண்டார். 48 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த திரிமன்னே, இம்ரான் தாகிர் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து களமிறங்கிய அனுபவ வீரர் மகேலா ஜெயவர்த்தனேயும், 16 பந்துகளை சந்தித்து, 4 ரன்கள் மட்டுமே எடுத்து தாகிர் பந்து வீச்சில், டுப்ளசிசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

விக்கெட்டை தாரை வார்த்த சங்ககாரா
23.1 ஓவர்களில், 81 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தடுமாறிய நிலையில், சங்ககாராவுடன், கேப்டன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும், டுமினி பந்து வீச்சில் டு பிளெசிசிடம் கேட்ச் கொடுத்து மேத்யூஸ் 19 ரன்களில் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிவடைந்ததால் பேட்டிங் பவர் பிளேயை தேர்ந்தெடுத்தது இலங்கை. சங்ககாரா அடித்து ஆட ஆரம்பித்தார். அப்போது, பவுண்டரி எல்லையில், மோர்க்கல் பந்து வீச்சில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 96 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்திருந்தார். ஆனால் பார்ட்னர்ஷிப் கிடைக்காமல், விக்கெட்டை தாரை வார்த்து சென்றார்.

தாகிர் அபாரம்
37.2 ஓவர்களில் இலங்கை 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டுமினி 3 விக்கெட்டுகளையும், தாகிர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஆம்லா அதிர்ச்சி அவுட்
134 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தை தொடங்கியது. ஆரம்பம் முதலே, தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் பதற்றமின்றி அடித்து ஆட தொடங்கினர். 23 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த ஹசிம் ஆம்லா, மலிங்காவின் பந்தில் குலசேகராவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பவுண்டரி எல்லையில் மிக நீண்ட தூரம் ஓடி வந்து அந்த கேட்சை அசத்தலாக பிடித்தார் குலசேகரா.

டென்ஷன் ஏறியது
ஆம்லா விக்கெட்டை தொடர்ந்து, மலிங்கா ஏதாவது மேஜிக் செய்து, தென் ஆப்பிரிக்காவை நிலை குலைய வைப்பார் என்று இலங்கை ரசிகர்கள் எதிர்பார்த்தனர். தென் ஆப்பிரிக்க ரசிகர்களோ, கை விரல் நகங்களை கடிக்க தொடங்கினர்.

பதற்றமில்லை
ஆனால், டி காக் மற்றும் டு பிளெசிஸ் எந்த கட்டத்திலும், தடுமாறாமல் தங்களது அதிரடியை தொடர்ந்தனர். லீக் சுற்றில் ஏமாற்றிய டி காக், முக்கியமான இன்றைய ஆட்டத்தில், அசத்தினார். அவரது பேட்டில் இருந்து கிளம்பிய பந்துகளை பிடிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் திணறினர்.
டு பிளெசிஸ் ஓரளவுக்கு நிதானமாக ஆடினாலும், எளிதான பந்துகளை அடிக்கவும் தவறவில்லை. 18வது ஓவரில், தென் ஆப்பிரிக்கா வெற்றி இலக்கான 134 ரன்களை எட்டியது. டி காக் பவுண்டரி மூலம், வெற்றி இலக்கை எட்டச் செய்தார்.

மிகப்பெரும் வெற்றி
7.44 என்ற ரன் ரேட் விகிதத்தில் அசால்ட்டாக இந்த வெற்றியை வசப்படுத்தியது தென் ஆப்பிரிக்கா. டிகாக் 57 பந்துகளில் 78 ரன்களுடனும், டு பிளெசிஸ் 31 பந்துகளில் 21 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர். 192 பந்துகள் மிச்சமிருக்கும்போது பெறப்பட்ட இந்த வெற்றி, உலக கோப்பை நாக்-அவுட் சுற்றுகளில் பெறப்பட்ட ஒரு அணியின் பெரிய வெற்றியாகும்.

அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா
4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இலங்கையின் முதுகெலும்பை உடைத்த இம்ரான் தாகிருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. கடந்த இரு உலக கோப்பைகளின்போதும் இறுதி போட்டி வரை முன்னேறிய, இலங்கை, இம்முறை காலிறுதியை தாண்ட முடியாமல் வெளியேறியது. தென் ஆப்பிரிக்கா முதல் முறையாக நாக்-அவுட் சுற்றில் வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் தகுதி பெற்றது.
கண்ணீர் மல்க
சங்ககாரா மற்றும் ஜெயவர்தனே ஆகிய மூத்த இலங்கை வீரர்கள் இப்போட்டியுடன் ஓய்வு பெறுகின்றனர். எனவே, இரு நாட்டு வீரர்களுமே, அவர்கள் இருவரையும் கட்டித் தழுவி கண்ணீர் மல்க விடையளித்தனர்.


Click it and Unblock the Notifications











