ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
மும்பை : 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் அனுபவங்களை திரைப்படமாக எடுக்க உள்ளனர்.
இதற்கான முதல் கட்டமாக 1983 உலகக்கோப்பை வென்ற அணியில் இடம் பெற்ற வீரர்களின் அனுபவங்களை கேட்க மற்றும் இந்த படத்தில் பங்கு பெற ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஒப்பந்த சிக்கல்
இந்த ஒப்பந்தத்தில் தான் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. உலகக்கோப்பை வென்ற அணி வீரர்கள் ஒவ்வொருக்கும் ரூ.15 லட்சத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 10 வீரர்கள் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வளவு தானா?
1983 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் தான் இந்தியாவின் கிரிக்கெட் என்ற விளையாட்டு பிரபலமானது. அப்படிப்பட்ட பெரிய மாற்றத்துக்கு காரணமான வீரர்களுக்கு வெறும் ரூ.15 லட்சம் மட்டும் தான் சம்பளமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அனுபவங்கள்
இந்த ஒப்பந்தந்தின் படி இந்த வீரர்கள் அனைவரும் தங்கள் உலகக்கோப்பை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும், படத்தில் சில காட்சிகளிலோ அல்லது படம் தொடர்பான நிகழ்ச்சிகளிலோ பங்கு பெற வேண்டி வரலாம்.

மிகவும் குறைவு
அதற்கு இந்த தொகை மிகவும் குறைவு என சிலர் கருதுவதாக தெரிகிறது. மொத்தமாக பார்த்தால் பத்து வீரர்களுக்கு வெறும் ரூ.1.5 கோடி தான் செலவிடப்பட உள்ளது. இது மிகவும் குறைவு என சில வீரர்கள் கருதுவதால், இதன் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என தெரியவில்லை.

கபில் தேவ் தனி
இதில் முக்கியமான இரு வீரர்களான கபில் தேவ் மற்றும் கவாஸ்கர் கதை வேறாக உள்ளது. கபில் தேவுக்கு தனி மதிப்பிற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதில் அவர் கையெழுத்திட்டுள்ளார். கபில் தேவ் தான் 1983 உலகக்கோப்பை வெற்றியின் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலுவையில் கவாஸ்கர்
அதே சமயம், கவாஸ்கருக்கும் தனி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால், அவர் இதுவரை அதில் கையெழுத்து இடவில்லை என செய்திகள் வந்துள்ளன. கவாஸ்கர் தற்போது உலகின் முன்னணி கிரிக்கெட் வர்ணனையாளராக இருப்பதோடு அதற்கு கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற இந்திய அணி
1983 உலகக்கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணி - கபில் தேவ், கவாஸ்கர், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சையத் கிர்மானி, மொஹிந்தர் அமர்நாத், பல்விந்தர் சாந்து, மதன் லால், ரவி சாஸ்திரி, சந்தீப் பாட்டில், ரோஜர் பின்னி, சுனில் வல்சன், கீர்த்தி ஆசாத் மற்றும் யஷ்பால் சர்மா.


Click it and Unblock the Notifications