கபில்தேவ் 175 ரன்கள் விளாசிய வீடியோ இல்லை.. என்ன காரணம்? குறையை போக்கிய 83 படக்குழு..!
மும்பை: 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து 83 என்ற பாலிவுட் படம் எடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இந்தப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் 3000 திரையரங்குகளில் இன்று வெளியானது.
கேப்டன் கபில்தேவ்வாக ரன்வீர் சிங் நடித்து உள்ளார், ஸ்ரீகாந்தாக நடிகர் ஜீவா நடித்துள்ளார்.

யாரும் பார்க்காத சாதனை
நாம் ஒரு சாதனை படைத்தோம், ஆனால் அதனை யாரும் பார்க்கவில்லை என்றால் நமக்கு எப்படி இருக்கும். அது தான் கபில்தேவ் வாழ்க்கையில் நடந்தது. 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் ஒரு வரலாற்று சாதனை படைத்தார். ஆனால் அதனை யாரும் பார்க்கவில்லை.

கபில்தேவ் 175
லீக் சுற்றில் இந்திய அணிக்கு வாழ்வா சாவா என்ற போட்டி அது. ஜிம்பாப்வேவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 17 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தடுமாறிய போது களத்திற்கு வந்த கபில்தேவ் 138 பந்துகளில் 175 ரன்கள் விளாசினார்.இதில் 16 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். கபில்தேவ்வின் இந்த ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஊழியர்கள் ஸ்டிரைக்
உலகக் கோப்பை வரலாற்றிலேயே சிறந்த ஆட்டம் என்று கருதப்பட்ட இந்தப் போட்டியை மைதானத்தில் இருந்தவர்களை தவிர வேறு யாரும் பார்க்கவில்லை. ஏனென்றால் அப்போது போட்டியை ஒளிபரப்பிய பி.பி.சி. தொலைக்காட்சியில் ஊழியர்கள் அன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் போட்டி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இதனால் கபில்தேவ்வின் சாதனை இன்னிங்ஸ் தொடர்பான எந்த ஒரு வீடியோவும் இல்லை.

குறையை போக்கிய படக்குழு
இந்த நிலையில், அந்த குறையை போக்கியது 83 படம். இந்தப் படத்தில் ஜிம்பாப்வேவிற்கு எதிராக அன்றைய நாள் என்ன நடந்தது, கபில்தேவ்வின் பேட்டிங் எப்படி இருந்தது என்பதை படக்குழு அழகாக காட்சிப்படுத்தியுள்ளது. இதனால் கபில் தேவின் சாதனையின் உண்மை வீடியோ இல்லை என்றாலும் சினிமா காட்சிகள் அதனை மக்களுக்கு கொண்டு வந்துள்ளது.இதனால் கபில் தேவ்வின் வாழ்நாள் குறையை படக்குழு போக்கியது.


Click it and Unblock the Notifications