கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத பெயர் அர்ஜுனா ரணதுங்கா. 1996-ம் ஆண்டு இலங்கைக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்து, அந்த நாட்டை கிரிக்கெட் உலக வரைபடத்தில் முக்கிய இடம்பிடிக்க வைத்தவர். அப்படிப்பட்ட ஜாம்பவான் கேப்டன், விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவர் இலங்கை பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்தபோது நடந்த ஊழல் புகாரில், அவர் நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுனா ரணதுங்கா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தீவிர அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். 2017-ம் ஆண்டு காலகட்டத்தில் அவர் பெட்ரோலிய வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அந்தச் சமயத்தில் எரிபொருள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் எண்ணெய் வாங்குவதற்குப் பதிலாக, விதிமுறைகளை மாற்றி உடனடி கொள்முதல் மூலம் அதிக விலை கொடுத்து எண்ணெய் வாங்கியதாகப் புகார் எழுந்துள்ளது.
இலங்கை ஊழல் தடுப்புப் பிரிவு நடத்திய விசாரணையில், ரணதுங்க எடுத்த முடிவுகளால் அரசுக்குச் சுமார் 80 கோடி இலங்கை ரூபாய் (சுமார் 5 மில்லியன் டாலர்கள்) நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மொத்தம் 27 கொள்முதல்களில் இந்த முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை கொழும்பு நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், "அர்ஜுனா ரணதுங்கா தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். அவர் எப்போது இலங்கை திரும்புகிறாரோ, அப்போது அவர் கைது செய்யப்படுவார்," என்று நீதிபதியிடம் தெரிவித்தனர்.
அண்ணன் ஏற்கனவே கைது
இந்த ஊழல் வழக்கில் ரணதுங்கவின் மூத்த சகோதரரும், அப்போதைய சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தலைவருமான தம்மிக்க ரணதுங்கா (Dhammika Ranatunga) ஏற்கனவே கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும், அவர் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புதிய அதிபர் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அமைந்த பிறகு, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
93 டெஸ்ட் மற்றும் 269 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,000 ரன்களுக்கு மேல் குவித்தவர் ரணதுங்கா. 1996 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கைக்கு முதல் உலகக்கோப்பையைப் பெற்றுத்தந்த நாயகன். ஒரு காலத்தில் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட கேப்டன், இன்று ஊழல் வழக்கில் கைதாகும் நிலையில் இருப்பது இலங்கை ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.