கட்டாக் டி-20.. இந்தியா அபார வெற்றி.. இலங்கையை துவம்சம் செய்தது!
கட்டாக்: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள 'பாரப்பட்டி' மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.
இதில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா டி-20 போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தியது.
மிகவும் அபாரமாக ஆடிய இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. இந்திய அணியின் பவுலிங்கும் இதில் மிகவும் சிறப்பாக இருந்தது.

ஆதிக்கம்
இலங்கை அணி இந்தியாவிற்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட வந்து இருக்கிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்று கணக்கில் தொடரை வென்றது. இந்திய கேப்டன் கோஹ்லி திருமணத்திற்காக ஓய்வில் இருப்பதால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இந்தியா ஒருநாள் தொடரை 2-1 என்று கணக்கில் வென்றது.

இளம்படை
இந்த நிலையில் இந்தியா இலங்கை மோதும் மூன்றாவது முதல் டி20 போட்டி தற்போது கட்டாக்கில் நடக்கிறது. இந்த போட்டிக்காக இந்திய அணியில் புதிய வீரர்கள் பலர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி இந்திய அணியில் ரோஹித் சர்மா, டோணி, லோகேஷ் ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, ஜெயதேவ் உங்கட், குல்தீப் யாதவ், பும்ரா, சாஹல் ஆகியோர் விளையாடும் அணியில் உள்ளனர்.

பேட்டிங்
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்திய அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடியது. லோகேஷ் ராகுல் அதிரடியாக 61 ரன்கள் எடுத்தார். டோணி 39 ரன்கள் எடுத்தார். திசேரா பெரேரா, ஏஞ்சலோ மெத்தியூஸ், நுவான் பிரதீப் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தியா 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.

வெற்றி
181 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை தொடக்கத்திலேயே சொதப்பியது. களம் இறங்கிய வீரர்கள் அனைவரும் வரிசையாக விக்கெட்டை இழந்தனர். சாஹல் அதிகபட்சமாக 4 விக்கெட் எடுத்தார். பாண்டியா 3 விக்கெட் எடுத்தார். குலதீப் 2 விக்கெட் எடுத்தார். ஜெயதேவ் 1 விக்கெட் எடுத்தார். இதனால் 181 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை 87 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.


Click it and Unblock the Notifications