டெல்லி : ஐசிசி உலக கோப்பையில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நடந்த முக்கியமான அதிர்ச்சி சம்பவம் தற்போது மீண்டும் நடந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியாவில் நடைபெற்ற 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றியது. அந்தத் தொடரில் ஒரு முக்கிய சம்பவம் நடைபெற்றது அப்போது பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட இங்கிலாந்து பலம் குன்றிய அயர்லாந்திடம் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியை ரசிகர்கள் கனவில் கூட யாரும் எதிர்பார்க்கவில்லை. பெங்களூரில் நடந்த இந்த ஆட்டத்தில் 300 ரன்களுக்கு மேல் இங்கிலாந்து அணி குவித்தும், அதனை அயர்லாந்து அணி யாருமே எதிர்பார்க்காத வகையில் துரத்தியது.
தற்போது அதே மாதிரி இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை தழுவி இருக்கிறது. மேலும் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணி தங்களுடைய உலக கோப்பையின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளியை சந்தித்தது. அதேபோல் தற்போது ஆஸ்திரேலிய அணி இம்முறையும் தொடர்ந்து தோல்வியை தழுவி இருப்பது கவனிக்கத்தக்கது. இதனால் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு ஒரே சான்றுகள் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இதனால் 2011 ஆம் ஆண்டு தோனி உலக கோப்பையை வென்றது போல், 2023 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா உலக கோப்யை வென்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம் கடந்த டி20 உலக கோப்பை நடைபெற்ற போது கூட இதே மாதிரி தான் ரசிகர்கள் சிலர் 2011 உலகக் கோப்பை போல் அதை ஒப்பிட்டு பேசினார்கள். ஆனால் இந்திய அணி அரை இறுதியில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் எது நடந்தாலும் இந்திய அணிக்கு ரசிகர்கள் முழு ஆதரவு கொடுப்பதே தற்போது முக்கியமாகும்.