
2011 உலகக்கோப்பை இறுதி சர்ச்சை
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி கோப்பை வென்று இருந்தது இந்திய அணி. அந்தப் போட்டி நடந்த போது இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அலுத்கமகே, அந்த இறுதிப் போட்டியை இலங்கை விற்று விட்டது என குற்றம் சுமத்தி இருந்தார்.

முன்னாள் வீரர்கள் கோபம்
அதைக் கேட்ட முன்னாள் வீரர்களும், அந்தப் போட்டியில் ஆடிய மூத்த வீரர்களும் ஆன மகிளா ஜெயவர்தனே மற்றும் குமார் சங்ககாரா கோபம் அடைந்தனர். அவரது இந்த புகாருக்கு ஆதாரம் கேட்டு அவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டினர்.

சில குழுக்கள்
இந்த நிலையில், இலங்கை வீரர்கள் மீது தான் குற்றம் சுமத்தவில்லை என்றும், சில குழுக்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் கூறினார் அந்த முன்னாள் அமைச்சர். அவர் சில இலங்கை அதிகாரிகள் அந்தப் போட்டி நடந்த ஆண்டில் கார் கம்பெனிகளை வாங்கியதாகக் கூறி பரபரப்பை கிளப்பினார்.

நான்கு வீரர்கள் மாற்றம்
மேலும், இறுதிப் போட்டிக்கு முன்னதாக நான்கு வீரர்கள் தனக்கும், இலங்கை கிரிக்கெட் போர்டு அதிகாரிகளுக்கும் தெரிவிக்காமல் மாற்றப்பட்டதாக குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை கிளப்பி இருந்தது. அவர் மறைமுகமாக தேர்வுக் குழுவை சாடி இருந்தார்.

தேர்வுக் குழு
2011 உலகக்கோப்பை நடந்த போது தேர்வுக் குழு தலைவராக இருந்தவர் முன்னாள் வீரர் அரவிந்தா டி சில்வா. அவர் தான் 1996 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடி இலங்கை அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்து இருந்தார். அவர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

விசாரணை துவக்கம்
2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி குறித்த சர்ச்சை இலங்கையில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், இலங்கை அரசு காவல்துறை விசாரணையை துவக்கியது. முதல் ஆளாக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே விசாரிக்கப்பட்டார்.

அரவிந்தா டி சில்வா
முன்னாள் தேர்வுக் குழு தலைவர் அரவிந்தா டி சில்வா செவ்வாய் அன்று காவல்துறையால் விசாரிக்கப்பட்டார். சுமார் ஆறு மணி நேரம் நீடித்தது இந்த விசாரணை. அதன் முடிவில், ஒரு வீரரை இலங்கை காவல்துறை கட்டம் கட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

துவக்க வீரர்
இலங்கை அணியின் துவக்க வீரர் உபுல் தரங்கா அந்த இறுதிப் போட்டியில் நிதான ஆட்டம் ஆடி இருந்தார். அவரது பெயரை அரவிந்தா டி சில்வா விசாரணையில் கூறி இருக்கலாம் அதனால், அவரை விசாரிக்க உள்ளது இலங்கை காவல்துறை.

நீளும் சர்ச்சைகள்
மஹிந்தானந்த அலுத்கமகே முதன் முதலில் இந்த மேட்ச் பிக்ஸிங் புகாரை எழுப்பிய போது இதில் எந்த உண்மையும் இருக்காது என்றே பொதுவான தோற்றம் இருந்தது. ஆனால், விசாரணை துவங்கி உள்ள நிலையில் மேட்ச் பிக்ஸிங் தொடர்பான சந்தேகங்கள் அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











