2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி மேட்ச் பிக்ஸிங்.. இலங்கை அரசு அதிரடி விசாரணை.. பிசிசிஐ கப்சிப்!
கொழும்பு : 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணி மேட்ச் பிக்ஸிங் செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார் முன்னாள் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே.
அது தொடர்பாக இலங்கையில் சர்ச்சை வெடித்த நிலையில் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகபெரும விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்ததா? என விசாரணை நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

2011 உலகக்கோப்பை
2011 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்று மற்றும் அரையிறுதிப் போட்டியில் வென்று இந்தியா - இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இறுதிப் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 274 ரன்கள் குவித்தது.

இந்தியாவின் முக்கிய வெற்றி
அடுத்து ஆடிய இந்திய அணி அந்த இலக்கை சேஸிங் செய்து உலகக்கோப்பையை வென்றது. அது இந்திய அணியின் முக்கிய வெற்றிகளில் ஒன்றாகும். 28 ஆண்டுகள் கழித்து இந்தியா வென்ற இரண்டாவது உலகக்கோப்பை அது.

திடீர் குற்றச்சாட்டு
சுமார் 9 ஆண்டுகள் கழிந்த நிலையில் அந்தப் போட்டியில் இலங்கை மேட்ச் பிக்ஸிங் செய்து தோல்வி அடைந்ததாக அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறி இருந்தார். சில குழுக்கள் இதில் ஈடுபட்டதாக சூசகமாக அவர் கூறி இருந்தார்.

முன்னாள் கேப்டன்கள் கேள்வி
எனினும், அந்தப் போட்டியில் ஆடிய முன்னாள் இலங்கை கேப்டன்கள் மகிளா ஜெயவர்தனே மற்றும் குமார் சங்ககாரா ஆதாரம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பி இருந்தனர். ஐசிசியிடம் அதை ஒப்படைத்து விசாரணை செய்யலாம் எனவும் சங்ககாரா கூறி இருந்தார்.

விசாரணை
இந்த நிலையில், தற்போதைய இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகபெரும அதிரடியாக அரசு சார்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இந்த விசாரணை குறித்து தனக்கு அறிக்கை அனுப்புமாறு அவர் கூறி உள்ளார்.

அரசியல்?
இலங்கையில் ஆகஸ்ட் மாதம் தேர்தல் வரும் நிலையில் இந்த மேட்ச் பிக்ஸிங் புகார் எழுப்பப்பட்டுள்ளதாக சிலர் கூறுகிறார்கள். எனினும், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரே இப்படி கூறுவதால் இதை எளிதாக எடுத்துக் கொள்ளவும் முடியவில்லை.

பிசிசிஐ மௌனம்
இதில் இலங்கை மட்டுமின்றி இந்திய அணியின் பெருமைக்குரிய உலகக்கோப்பை வெற்றியும் சம்பந்தப்பட்டுள்ளது. இலங்கை வேண்டும் என்றே தோல்வி அடைந்தது என்றால் அது இந்தியாவின் வெற்றியை குறைத்து மதிப்பிடுவது போலத்தான். இந்த நிலையில், பிசிசிஐ இது குறித்து மௌனம் காத்து வருகிறது.


Click it and Unblock the Notifications