ரிப்பீட்டாகும் வரலாறு.. 2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் நடந்த அதே சம்பவங்கள்.. இந்திய ரசிகர்கள் ஷாக்!
பெர்த்: 2011ம் ஆண்டு நடைபெற்ற சம்பவங்கள் மீண்டும் அப்படியே அச்சு அசலாக நடப்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி நடை போட்டு வந்த இந்திய அணிக்கு நேற்றைய தினம் திடீர் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுடன் நடைபெற்ற 3வது லீக் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. முதலில் ஆடிய இந்திய அணி 133 ரன்கள் குவிக்க, பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 19.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி கண்டது.

இந்திய அணி தோல்வி
முதல் 2 லீக் போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது 2வது இடத்திற்கு சறுக்கியுள்ளது. இனி வரும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும் என்ற சூழல் உள்ளதால் இந்திய அணி ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

சுவாரஸ்ய நிகழ்வு
இந்நிலையில் ஒரு சில ரசிகர்கள் இந்தியாவின் தோல்வியால் மகிழ்ச்சியில் உள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா?, இதற்கு காரணம் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு தான். 2011ம் ஆண்டு இந்திய அணி வென்ற உலகக்கோப்பை தொடரில் நடந்த அதே சம்பவங்கள் மீண்டும் தற்போது 2022ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்று வருகிறது.

ஓரியோ அறிமுகம்
அதாவது 2011ம் ஆண்டு ஓரியோ பிஸ்கட் அறிமுகப்படுத்தப்பட்ட போது, உலகக்கோப்பையை இந்தியா வென்றது. இதே போல இந்தாண்டு ஓரியோவின் புதிய வடிவ பிஸ்கட்டை தோனி வெளியிட்டார். அப்போது அவர், இந்தாண்டு சில சுவாரஸ்யங்கள் நடக்கலாம் என சூசகமாக கூறியிருந்தார். அதே போலவே இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் அதிர்ஷ்டவசமாக வெற்றி கண்டது.

அயர்லாந்து வெற்றி
2011ம் ஆண்டு இங்கிலாந்து அணியை முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் அயர்லாந்து வீழ்த்தியிருந்தது. அப்போது இந்தியா கோப்பை வென்றது. அதே போல இந்தாண்டு இங்கிலாந்து அணியை முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்து வீழ்த்தியுள்ளது. இதனால் இந்திய அணியின் பக்கம் கவனம் திரும்பியுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி
இதற்கெல்லாம் ஒருபடி மேல் சென்றுள்ளது இந்தியா vs தென்னாப்பிரிக்கா போட்டி. 2011ம் ஆண்டு லீக் சுற்றில் இந்திய அணியை தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தியிருந்தது. அந்த தொடரில் இந்தியா பெற்ற ஒரே ஒரு தோல்வி அதுதான். இதே போல தற்போதும், லீக் சுற்றில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிடம் தோற்றுள்ளது. அதுவும் முதல் தோல்வியாகும். இதனால் 2011ம் ஆண்டு நடந்த அதே சம்பவங்கள் மீண்டும் ரிப்பீட் ஆவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications