இவங்க இல்லை.. அப்ப மேட்ச் பிக்ஸிங் செய்தது யார்.. ஜெயவர்தனே அதிரடி.. 2011 உலகக்கோப்பை பைனல் சர்ச்சை
கொழும்பு : இந்தியா - இலங்கை அணிகள் மோதிய 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்ததாக ஒரு பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
Recommended Video
அந்த போட்டி நடந்த போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அலுத்கமகே இந்த புகாரை கூறிய போது, வீரர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்றார்.
இந்த நிலையில், அந்தப் போட்டியில் சதம் அடித்த முன்னாள் கேப்டன் மகிளா ஜெயவர்தனே அமைச்சர் குற்றச்சாட்டில் அர்த்தமே இல்லை என்பதை சுட்டிக் காட்டும் வகையில் ஒரு கிடுக்கிப்பிடி கேள்வியை கேட்டுள்ளார்.

9 ஆண்டுகள்
2011 உலகக்கோப்பை நடந்து முடிந்து 9 ஆண்டுகள் ஆகிறது. இந்திய அணி சொந்த மண்ணில் உலகக்கோப்பை வென்று சாதனை செய்து இருந்தது. அது இந்தியாவின் இரண்டாவது உலகக்கோப்பை வெற்றி ஆகும். இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இருந்தது தோனி தலைமையிலான இந்திய அணி.

மேட்ச் பிக்ஸிங்
தற்போது அந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்துள்ளதாக மஹிந்தானந்த அலுத்கமகே கூறி உள்ளார். அவர் 2010இல் இருந்து 2015 வரை இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். கிரிக்கெட் போர்டு அவரது அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

வீரர்கள் சம்பந்தப்படவில்லை
இந்த நிலையில், இலங்கை அணி 2011 உலகக்கோப்பை வெற்றியை விற்று விட்டதாகவும், இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்ததாகவும், ஆனால், அதில் வீரர்கள் சம்பந்தப்படவில்லை. சில குழுக்கள் ஈடுபட்டது எனவும் அவர் குற்றச்சாட்டில் கூறி இருந்தார்.

ஆதாரம் எங்கே?
அவரது குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்த முன்னாள் கேப்டன்கள் மகிளா ஜெயவர்தனே மற்றும் குமார் சங்ககாரா ஆதாரத்தை காட்டுமாறு கேட்டு இருந்தனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சில விளக்கங்களை கூறினார்.

விளக்கம்
அவர் கூறுகையில், மகிளா மற்றும் சங்ககாரா ஏன் இதை பெரிதாக்குகிறார்கள்? என கேட்டு இருந்தார். மேலும், வீரர்கள் யாரையும் தான் குற்றம் சாட்டவில்லை என்றும் கூறி இருந்தார். பெயர் குறிப்பிடாமல் சில அதிகாரிகள் மீது அவர் குற்றம் சுமத்தி இருந்தார்.

யார் மேட்ச் பிக்ஸிங் செய்தார்கள்?
வீரர்கள் யாரையும் தான் குறிப்பிடவில்லை என முன்னாள் அமைச்சர் கூறினால் யார் மேட்ச் பிக்ஸிங் செய்தார்கள்? வீரர்கள் இல்லாமல் எப்படி மேட்ச் பிக்ஸிங் செய்ய முடியும்? இதே கேள்வியைத் தான் கேட்டுள்ளார் மகிளா ஜெயவர்தனே.

எப்படி செய்ய முடியும்?
மகிளா ஜெயவர்தனே தன் ட்விட்டர் பதிவில், "நாங்கள் 2011 உலகக்கோப்பையை விற்று விட்டோம் எனக் கூறினால் அது பெரிய விஷயம் தான். ஒருவர் களமிறங்கும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறாமல் எப்படி பிக்ஸிங் செய்ய முடியும்?" என கேள்வி கேட்டுள்ளார்.

அமைச்சர் தான் சொல்ல வேண்டும்
மேலும், "9 ஆண்டுகள் கழித்து அது குறித்து நாங்கள் தெரிந்து கொள்வோம் என் நினைக்கிறேன்" என முன்னாள் அமைச்சர் விளக்கம் அளிப்பார் என நம்புவதாக கூறி உள்ளார். சில அதிகாரிகள், வீரரர்கள் துணை இன்றி எப்படி மேட்ச் பிக்ஸிங் செய்ய முடியும் என்பதை அமைச்சர் தான் விளக்க வேண்டும்.

கார் கம்பெனி
சில அதிகாரிகள் அந்த இறுதிப் போட்டி நடந்த அதே ஆண்டில் கார் கம்பெனிகளை வாங்கியதாகவும் அவர் சுட்டிக் காட்டி இருந்தார். இந்த சர்ச்சை பெரிதாகி வரும் நிலையில் ஐசிசி இதை கவனிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications