“ஜனவரியில் கைத்தட்டல்கள்; டிசம்பரில் காணவில்லை” 2021ல் தமிழகத்தின் மகன் ‘நடராஜனுக்கு’ நேர்ந்த சோகம்
சென்னை: 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ஆண்டின் முடிவு மோசமான ஒன்றாக அமைந்துள்ளது.
இதே ஆண்டில் ஜனவரி மாதத்தின் போது சேலம் சின்னப்பம்பட்டி நடராஜன், யார்க்கர் கிங் நடராஜன் என்ற வார்த்தைகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருந்தது.
டி.நடராஜன் என்ற இளம் வீரர் ஒருவர் எந்தவித வசதிகளும் இன்றி விடாப்பிடியான முயற்சியால் ஐபிஎல் தொடர் வரை வந்து பின்னர் இந்திய அணிக்காக அறிமுகமான தருணம் அது.

2021ம் ஆண்டு எப்படி
இந்தாண்டு ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை அறிவித்த போது நெட் பவுலராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அதே சுற்றுப்பயணத்தில் மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் நடராஜன் விளையாடுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. மொத்தம் 13 விக்கெட்டுகளுடன் தொடரை முடித்த அவர் 2021ம் ஆண்டு என்னுடையது என கெத்தாக வலம் வந்தார்.

வியப்பில் ஆழ்ந்த வீரர்கள்
அந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சொந்த ஊர் திரும்பிய பிறகு நாடே வியக்கும் அளவிற்கான வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது. நடராஜனின் திறமையை கண்டு பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, கார் ஒன்றையும் பரிசாக அளித்திருந்தார்.

அதிக எதிர்பார்ப்புகள்
ஸ்லோயர் பந்துகள் மற்றும் துல்லியமான யார்க்கர் பந்துகள் ஆகியவைகளை தனது பலமாக வைத்திருந்த நடராஜன் அதன் பிறகு இந்திய அணியின் முன்னணி பவுலராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. பும்ரா, நடராஜன், ஷமி ஆகியோரின் மும்முனை போட்டியை காணவும் எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருந்தது. ஆனால் அவை அடுத்த மாதத்திலேயே சுக்கு நூறாக உடைந்தன.

முதல் பிரச்சினை
முழங்கால் காயம் காரணமாக அவதிப்பட்ட டி. நடராஜன் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் தங்கி சிகிச்சை பெற்றார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் சரிவரப் பங்கேற்க முடியவில்லை. கடைசி டி20 போட்டியில் வாய்ப்பு கிடைத்த போதும் சோபிக்க முடியவில்லை. இதனால் நடராஜன் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்றால் ஐபிஎல்- ல் சிறப்பாக விளையாடுவது தான் ஒரே வழி என்ற நிலை உருவானது.

ஐபிஎல் தொடர்
ஏப்ரல் மாதத்தில் நடந்த ஐபிஎல் 14ஆவது சீசனில் பங்கேற்றார். முதல் சில போட்டிகளில் விளையாடிய அவர், அதன்பிறகு மீண்டும் முழங்கால் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகி மருத்துவ சிகிச்சைக்குச் சென்றார். அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு தொடர் ஓய்வில் இருந்த அவர், சமீப காலமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஃபார்முக்கு திரும்புவதில் சிரமம்
அறுவை சிகிச்சை கொடுத்த "நீண்ட நாள் ஓய்வு" என்ற பரிசின் காரணமாக ரசிகர்கள் "எங்கே அந்த டி நடராஜன்" என்று கேட்கும் நிலை உருவாகிவிட்டது. தன் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடினார். காயத்தில் இருந்த மீண்ட அவர், மீண்டும் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் வரை வாரி வழங்கினார். இதன் விளைவு, விஜய் ஹசாரே தொடருக்கான தமிழ்நாடு அணியில் அவர் சேர்க்கப்படவில்லை.

தொடர் ஏமாற்றங்கள்
தொடர் ஏமாற்றங்களை சந்தித்து வந்த டி.நடராஜன் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கம்பேக் கொடுப்பதற்காக இந்தாண்டு நடராஜனுக்கு இருந்த கடைசி வாய்ப்பு ராஞ்சி கோப்பை மட்டுமே. அதற்கான தமிழக அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் உடற்தகுதியை காரணம் கூறி டி.நடராஜன் மீண்டும் ஒருமுறை புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

அடுத்தாண்டுக்கான திட்டம்
2021ம் ஆண்டில் எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் கிடைக்காத வரவேற்பு, பிரபலம் ஆகியவையை பெற்ற டி.நடராஜனுக்கு ஆண்டின் இறுதியும் எந்தவொரு வீரருக்கும் கிடைக்காத வகையில் அமைந்துள்ளது. அடுத்ததாக அவருக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் மெகா ஏலம் தான். எனவே வரும் 2022ம் ஆண்டில் ஆவது மீண்டும் நடராஜனின் ஆட்டம் வேகமெடுக்கும் என ரசிகர்கள் மற்றும் மைக்கேல் தமிழ் சார்பாக வாழ்த்துகளை கூறிக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications