வெற்றி பாதைக்கு திரும்பிய இந்திய மகளிர் அணி.. ஆசிய மகளிர் கோப்பை அரையிறுதிக்கு தகுதி
சில்ஹெட் : ஆசிய மகளிர் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணி நேற்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. இது டி20 வரலாற்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றது 3வது முறையாகும்.
இதனால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தோல்விக்காக பயிற்சியாளர் ரமேஷ் பவார் ரசிகர்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலை ஏற்பட்டது.

அதிரடி ஆட்டம்
இந்த நிலையில், இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. இன்றைய ஆட்டத்தில் ஹர்மன்பிரித் கவுர் விளையாட வில்லை. அவருக்கு பதிலாக ஸ்மிருதி மந்தானா கேப்டன் பொறுப்பை ஏற்றார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கடந்த சில போட்டிகளில் களமிறங்காத செஃபாலி வர்மா, தொடக்க வீரராக களமிறங்கி ரன்களை விளாசினார்.

அரைசதம்
44 பந்துகளை எதிர்கொண்டு 55 ரன்களை விளாசினார். இதில் 2 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். கேப்டன் ஸ்மிருதி மந்தானா வழக்கம் போல் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். ஜெமிமா ரோட்ரிகியூஸ் தன் பங்கிற்கு 35 ரன்கள் சேர்த்தார்.

தடுமாற்றம்
இறுதியில் மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 159 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்திய அணி வீராங்கனைகள் கட்டுக்கோப்பாக பந்துவீசியதால் வங்கதேச பேட்டர்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவது போல் மெதுவாக ரன் சேர்த்தனர்.

இந்தியா வெற்றி
ஃபர்கனா 30 ரன்களும், முர்சிதா 21 ரன்களும், சுல்தானா அதிகபட்சமாக 36 ரன்களும் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் வங்கதேச மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய மகளிர் அணி, ஆசிய கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.


Click it and Unblock the Notifications