துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த தொடரை பாகிஸ்தானில் நடத்தினால் தாங்கள் பங்கேற்க மாட்டோம் என பிசிசிஐ போர் கொடி தூக்கியது.
அப்படி பிசிசிஐ, இதனை புறக்கணித்தால் பாகிஸ்தான் அணி உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு வராது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் பதிலடி கொடுத்தது. இதனை அடுத்து ஆசிய கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

அப்போது பாகிஸ்தான் இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு நல்ல முடிவை எடுத்தது. அதன்படி இந்தியா விளையாடும் போட்டியை இலங்கை அல்லது துபாயில் நடத்திக் கொள்ளலாம் என்றும் மற்ற போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு உறுப்பினர் நாடுகள் ஒப்புதல் தெரிவித்தனர்.
இதற்கு முதலில் இந்தியாவும் ஒப்புதல் வழங்கியது. ஆனால் தற்போது மீண்டும் பிரச்சனையை கிளப்பும் வகையில் இந்தத் திட்டத்திற்கு நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம் என இந்தியா அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் ஆசிய கோப்பை நடந்தால் தாங்கள் அந்தத் தொடரிலே பங்கேற்க மாட்டோம் என்றும் அதற்கு பதில் ஐந்து நாடுகள் கொண்ட ஒரு மினி தொடரை இந்தியாவில் நடத்துவோம் என்றும் பி சி சி ஐ குறிப்பிட்டுள்ளது.

இதனால் கலக்கமடைந்த மற்ற ஆசிய நாடுகள் பாகிஸ்தானில் ஆசியக் கோப்பை நடத்த வேண்டாம் என பிசிசியின் முடிவுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. பெரும் பாகிஸ்தானுக்கு பதில் இலங்கையில் இந்த தொடரை நடத்த அனைத்து நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளது .இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆசியக் கோப்பை தொடர் தங்களை விட்டுச் செல்லாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
ஆசிய கோப்பை தங்கள் நாட்டில் நடத்தப்படவில்லை என்றால் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை தொடரை தாங்கள் புறக்கணிப்போம் என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால் இந்த பிரச்சனை பல்வேறு கட்டங்களில் நகர்ந்து தற்போது மீண்டும் ஆரம்ப புள்ளிக்கே சென்றிருக்கிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஐசிசி முழித்து வருகிறது.