மும்பை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை தற்போது வெளியாக இருக்கிறது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்த தொடர் நடைபெறுவதால் சாம்பியன் பட்டத்தை இந்தியா கைப்பற்றும் என ரசிகர்கள் நம்பிக்கையாக இருக்கிறார்கள்.
இந்தத் தொடர் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, வங்கதேசம் ,ஆப்கானிஸ்தான் ஆகிய பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்கிறது.

மொத்தம் 12 மைதானங்களில் 48 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் கடந்த முறை பைனலில் மோதிய நியூசிலாந்தும் இங்கிலாந்தும் பல பரிட்சை நடத்துகின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்ள இருக்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற அதிக வாய்ப்பு இருக்கிறது.
இதேபோன்று ஆசிய கோப்பை பிரச்சினை காரணமாக பாகிஸ்தான அணி இந்த தொடரில் பங்கேற்குமா என சந்தேகம் இருந்த நிலையில், இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. துபாயில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு வர ஒப்பு கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் தென்னிந்தியாவில் விளையாடவே பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி சென்னை, பெங்களூரு ,ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் பாகிஸ்தான் தங்களது அனைத்து லீக் ஆட்டங்களிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. ஒருவேளை பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றாலும் அகமதாபாத்தில் விளையாட அந்த அணி ஒப்புக் கொண்டிருக்கிறது. அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி வரும் அக்டோபர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் பிசிசிஐ வெளியிடும் என தெரிகிறது.