2023 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் தொடர் ? எந்த மாதத்தில் யாருடன் மோதல்.. அட்டவணை இதோ
மும்பை : 2023 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு முக்கியமான ஆண்டாக விளங்க உள்ளது. காரணம் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது.
இதில் இந்திய அணி வெற்றி பெறுமா ஐசிசி கோப்பையை இப்போதாவது வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் நடப்பாண்டில் இந்திய அணி ஒருநாள் போட்டியில் தான் அதிகம் கவனம் செலுத்துகிறது. இன்னும் சொல்ல போனால் மற்ற அணிகளை விட இந்தியா தான் அதிக ஒருநாள் போட்டியில் இந்த புத்தாண்டில் விளையாடுகிறது. ஆனால் வெறும் 8 டெஸ்ட் போட்டியில் தான் இந்தியா 2023ஆம் ஆண்டு பங்கேற்கிறது.
இந்த ஆண்டில் இந்திய அணி எந்தெந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இது உலகக்கோப்பை ஆண்டு என்பதால் புத்தாண்டில் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்துகிறது.

முதல் 3 மாதம்
ஜனவரி மாதம் இந்திய அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணியுடன் தனது சொந்த மண்ணில் மோதுகிறது. இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதனை அடுத்து பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.

ஐபிஎல் தொடர்
இதை தொடர்ந்து மார்ச் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிக் கொண்டு தொடரில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது. ஏப்ரல், மே இரண்டு மாதம் முழுவதும் ஐபிஎல் போட்டியில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்பார்கள். இதனை தொடர்ந்து ஜூன் முதல் வாரத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி பங்கேற்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

ஆசிய கோப்பை
இதனை தொடர்ந்து ஜூலை மாதத்தில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதனை அடுத்து ஆகஸ்ட் மாதம் இறுதியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா பங்கேற்குமா என்ற சந்தேகம் இருக்கும் நிலையில் பாகிஸ்தானில் இருந்து போட்டிகள் மாற்றப்பட்டால் இந்தியா நிச்சயம் விளையாடும். இதனை அடுத்து செப்டம்பர் இறுதியில் இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

50 ஓவர் உலககோப்பை
இதை தொடர்ந்து அக்டோபர், நவம்பர் மாதத்தில் ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. சொந்த மண்ணில் நடைபெறுவதால் உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் பங்கேற்கிறது. இதன் பிறகு டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.


Click it and Unblock the Notifications