மும்பை : தாம் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த ஒரு பிரிவில் சில தடைகளால் சாதிக்க முடியவில்லை என்றால் வாழ்க்கை முடங்கி விட்டது என்று பலரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலையில் இங்கு ஒரு கிரிக்கெட் வீரர் ஒரு புதிய சாம்ராஜியத்தையே உருவாக்கி இருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு புத்தாண்டு தொடங்க உள்ள நிலையில் பலரும் பல ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்ய வேண்டும் என்று மோட்டிவேஷனல் வீடியோக்களை தேடிக் கொண்டிருப்போம். அப்படி ஒரு மோட்டிவேஷனல் கதைதான் இது.

சச்சின், கங்குலி, டிராவிட் போன்ற கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடி காயம் காரணமாக தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை தடைப்பட்ட நிலையில் தற்போது 14,200 கோடி ரூபாய் மதிப்புள்ள விளையாட்டுத் துறை வணிகத்தில் புது சக்தியாக விளங்குகிறார். அவர் வேறு யாருமில்லை. அவருடைய பெயர் ஜெட்டின் பரஞ்சப்பே. 1998 ஆம் ஆண்டு கனடாவுக்கு சென்ற இந்திய அணி பாகிஸ்தானுடன் ஒருநாள் போட்டியில் விளையாடியது.
இதில் சச்சின், டிராவிட் போன்ற வீரர்களுடன் விளையாடிய ஜெட்டின் பரஞ்சப்பே, முக்கிய இன்னிங்ஸ் ஆடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்த நிலையில் அந்தத் தொடரின் போது காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவரால் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடவே முடியவில்லை. 62 ரஞ்சி டெஸ்ட்டில் விளையாடி 3964 ரன்கள் அடித்திருந்த ஜெட்டின் 13 சதம் அடித்திருக்கிறார்.
இப்படி கிரிக்கெட்டே கதி என்று இருந்த ஜெட்டினுக்கு தான் காயம் ஏற்பட்டதால் மீண்டும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் கொஞ்சம் கூட மனம் தளராத ஜெட்டின் கிரிக்கெட்டை அப்படியே மூடி வைத்துவிட்டு பிசினஸ் களத்திற்குள் இறங்கினார். விளையாட்டு தொடர்பாக ஒரு வணிகம் இருப்பதை புரிந்து கொண்ட ஜெட்டின் அதில் காலடி எடுத்து வைத்தார்
நைக் போன்ற பாரம்பரிய நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றிய ஜெட்டின், அங்கு பல்வேறு அணிகளுடன் பணியாற்றி இந்த விளையாட்டு துறை எப்படி இயங்குகிறது என்பதை புரிந்து கொண்டார். இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் கிலோ மோர் என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கினார். அதில் ஜெட்டின் திறமையை பார்த்து பல தொழில் முனைவோர்கள் அவருடைய நிறுவனத்திற்கு முதலீடு செய்தனர்.
இதன் மூலம் தற்போது ஜெட்டின் விளையாட்டு துறையில் தவிர்க்க முடியாத வணிக காந்தமாக விளங்குகிறார். காதலர் தினம் போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகை சோனாலி பிந்த்ரேவின் சகோதரியை தான் இவர் திருமணம் செய்து இருக்கிறார். மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ஜெடடின் போன்று ஒரு கதவு மூடப்பட்டாலும், மறு கதவை உடைத்து வாழ்க்கையில் முன் வர வேண்டும்.