டாக்கா: இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்பது குறித்து நீடித்து வந்த மர்மம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்தியா வரப்போவதில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற மிக முக்கியமான ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு, வங்கதேச வாரியம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விதித்த கெடு முடிவடையவிருந்த நிலையில், வங்கதேச விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் மற்றும் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பங்கேற்ற அவசரக் கூட்டம் டாக்காவில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், இந்தியாவிற்குச் சென்று விளையாடுவதற்குத் தேவையான அனுமதி கிடைக்கவில்லை என்றும், வீரர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்தியா செல்வதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்றக்கோரி ஐசிசியிடம் கடைசி முறையாகப் பேச்சுவார்த்தை நடத்த வங்கதேச வாரியம் திட்டமிட்டுள்ளது. ஆனால் ஐசிசி அட்டவணையை மாற்ற முடியாது என்பதில் உறுதியாக உள்ளது.
ஐசிசி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம், ஐசிசியைக் கடுமையாகச் சாடினார். "எங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஐசிசி நிராகரித்துவிட்டது. ஐசிசி கூட்டத்தில் நான் கேட்ட சில விஷயங்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தன. முஸ்தபிசுர் ரஹ்மான் விவகாரம் என்பது தனிப்பட்ட சம்பவம் அல்ல. இந்தியா மட்டுமே முடிவெடுக்கும் சக்தியாக உள்ளது."
"20 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டைப் புறக்கணிப்பது ஐசிசிக்குத்தான் இழப்பு. கிரிக்கெட் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படும் இக்காலத்தில், எங்களைப் போன்ற ஒரு நாடு உலகக்கோப்பையில் பங்கேற்கவில்லை என்றால் அது ஐசிசியின் தோல்வி. ஐசிசி எங்களுக்கு 24 மணி நேரக் கெடு விதித்துள்ளது. ஒரு சர்வதேச அமைப்பு இப்படிச் செயல்பட முடியாது" என்று காட்டமாகத் தெரிவித்தார்.
வங்கதேச விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் பேசுகையில், "நாங்கள் அனைவரும் உலகக்கோப்பையில் விளையாடவே விரும்புகிறோம். ஆனால் இந்தியாவில் எங்கள் வீரர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஐபிஎல் தொடரில் முஸ்தபிசுர் ரஹ்மான் வெளியேற்றப்பட்ட விதமே இதற்குச் சாட்சி. ஒரு தனி வீரருக்கே பாதுகாப்பு இல்லாதபோது, ஒட்டுமொத்த அணிக்கும் எப்படிப் பாதுகாப்பு கிடைக்கும் என்று எங்களை நம்பச் சொல்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
வீரர்களிடம் என்ன பேசப்பட்டது என்று கேட்டதற்கு, "வீரர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தோம். அவர்களை ஆபத்தில் சிக்க வைக்க நாங்கள் விரும்பவில்லை. இந்தியா செல்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.
வங்கதேச அணி அதிகாரப்பூர்வமாகத் தொடரிலிருந்து விலகும் பட்சத்தில், அந்த இடத்தைப் பூர்த்தி செய்யப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐசிசி விதிகளின்படி, தகுதி பெறாத அணிகளில் தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் அணிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும்.
அந்த வகையில், தற்போது தரவரிசை அடிப்படையில் ஸ்காட்லாந்து அணி முன்னிலையில் உள்ளது.
எனவே, வங்கதேசம் விலகினால் ஸ்காட்லாந்து அணி உலகக்கோப்பையில் சேர்க்கப்படும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அப்படி நடந்தால் குரூப் சி பிரிவில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளுடன் ஸ்காட்லாந்து மோத வேண்டியிருக்கும்.