இன்று ஐபிஎல் இறுதிப் போட்டி-பெங்களூரை வென்று மீண்டும் முடிசூடுமா சென்னை?

4வது ஐபிஎல் தொடர் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இன்று சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரும் மோதவுள்ளன.
இரு அணிகளும் ஏற்கனவே பெங்களூரில் நடந்த முதலாவது பிளே ஆப் போட்டியில் சந்தித்துக் கொண்டன. அப்போது பெங்களூரை அபாரமாக தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை.
தோல்வி கண்ட பெங்களூர் அணி நேற்று சென்னையில் நடந்த 2வது குவாலிபயர் போட்டியில், மும்பை இந்தியன்ஸை வலுவாக தோற்கடித்து அட்டகாசமாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
தங்களை பெங்களூரிலேயே வைத்து தோற்கடித்த சென்னை சூப்பர் கிங்ஸை, சென்னையில் வைத்து பழி தீர்க்க பெங்களூர் அணி ஆவலாக உள்ளது.
அதேசமயம், இதுவரை ஒரு போட்டியிலும் சென்னையில் தோற்காத சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டியிலும் அபாரமாக வென்று, 2வது முறையாக கோப்பையைக் கைப்பற்ற ஆயத்தமாகியுள்ளது.
பெங்களூர் அணியின் பெரும் பலம் யார் என்றால் அவர் கிறிஸ் கெய்ல் மட்டும்தான். மேலும், சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றது என்பதால் பெங்களூர் கேப்டன் டேணியல் வெட்டோரிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
இப்படி பெங்களூர் அணி பெரும் பலத்துடன் காணப்படும் நிலையில் மறுபக்கம் சென்னையும் படு சூப்பராகவே உள்ளது. அஸ்வினின் அபார பந்து வீச்சு கை கொடுக்கும். பத்ரிநாத் செம பார்மில் உள்ளார். சுரேஷ் ரெய்னா பின்னிப் பெடலெடுக்கக் காத்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக கூல் கேப்டன் டோணி இருக்கிறார்.
மேலும் மைக்கேல் ஹஸ்ஸி, வேயன் பிரேவோ ஆகியோரும் தக்க சமயத்தில் கை கொடுக்கத் தயாராக உள்ளனர்.
இன்றைய போட்டி சென்னை அணிக்கு மிக முக்கியமானது. இன்று வென்றால், சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பதோடு, 2வது முறையாக அதை வெல்லும் முதல் அணி என்ற பெயரும் சென்னைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, June 6, 2012, 17:06 [IST]
Other articles published on Jun 6, 2012


Click it and Unblock the Notifications