கொழும்பு: 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 306 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 87 ரன்கள் முன்னிலை பெற்று 2வது இன்னிங்சை தொடங்கியது. 3ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 1 விக்கெட் இழப்புக்கு இந்தியா 70 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம், இலங்கையை விட 157 ரன்கள் முன்னிலையிலுள்ளது இந்தியா.
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 393 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முதல் இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது.

திரிமன்னே 28 ரன்களுடனும், கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 19 ரன்களுடனும் களத்திலிருந்தனர். இலங்கை 253 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கியது.
140க்கு 3 விக்கெட் இழப்பு என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் இன்று பேட் செய்ய வந்த இலங்கை டீ இடைவேளைக்கு பிறகு 306 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
முன்னதாக, திரிமன்னே 62 ரன்களில் அவுட்டான நிலையில், கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் சதம் கடந்து 102 ரன்களில் அவுட் ஆனார். கடந்த போட்டியின் நாயகன் சண்டிமாலை 11 ரன்களில் வெளியேற்றினார் இஷாந்த் ஷர்மா.
இலங்கை 306 ரன்களில் ஆல்-அவுட் ஆனதால், இந்தியா முதல் இன்னிங்சில் 87 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய தரப்பில் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அஸ்வின் மற்றும் இஷாந்த் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். உமேஷ் யாதவ் மற்றும் ஸ்டூவர்ட் பின்னி தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து இந்தியா தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் சதம் விளாசிய லோகேஷ் ராகுல் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். முரளி விஜய் 39 ரன்களுடனும், ரஹானே 28 ரன்களுடனும் களத்திலுள்ளனர். இந்தியா 157 ரன்கள் முன்னிலையிலுள்ளது.