ராஜ்கோட்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவுக்குப் பதிலாக அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் மில்லரும் விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக்கும் களமிறங்கினர்.
இந்திய பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்ட இந்த தொடக்க ஜோடி வெளுத்து வாங்கியது. இதனால் 9-ஆவது ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி 50 ரன்களை எட்டியது. ஆனால் டி காக் - மில்லர் ஜோடியை 14-ஆவது ஓவரில் ஹர்பஜன் சிங் பிரித்தார்.
அடுத்து வந்த ஹஷிம் ஆம்லா 5 ரன்களில் வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய டு பிளெஸ்ஸிஸின் உதவியோடு டி காக் தனது அரை சதத்தை பதிவு செய்தார். 3-ஆவது விக்கெட்டுக்கு கைகோத்த டி காக் - டுபிளெஸ்ஸிஸ் ஜோடி 118 ரன்கள் குவித்தது.
ஒரு நாள் போட்டியில் தனது 19-ஆவது அரை சதத்தை எட்டிய டு பிளெஸ்ஸிஸ் 60 ரன்கள் எடுத்த நிலையில் மோஹித் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தனது 50-ஆவது ஒரு நாள் போட்டியில் பங்கேற்ற டி காக் அபாரமாக விளையாடி, 9-ஆவது சதத்தை விளாசினார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் ரன் அவுட்டானார். 118 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட மொத்தம் 103 ரன்கள் சேர்த்து டி காக் வெளியேறினார்.
இதன் பின்னர் தென்னாப்பிரிக்காவின் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. 50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் மோஹித் சர்மா 2 விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, அக்ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய ஷிகர் தவண் 13 ரன்களில் வெளியேறினார். அதன் பின்னர் கைகோர்த்த ரோஹித் சர்மா விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ரோஹித் சர்மா ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய கேப்டன் தோனி 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். முதல் நிலை பேட்ஸ்மேன்கள் அனைவரும் கணிசமாக ரன் குவித்திருந்தாலும், அணியின் ரன்ரேட்டைத் தக்கவைக்கத் தவறிவிட்டனர். இதனால்50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களை மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது.
இரு அணிகளுக்கும் இடையேயான 4வது ஒரு நாள் போட்டி சென்னையில் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.