
கம்பேக் வெற்றி
இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. தோல்வியின் பிடியில் இருந்து மீண்டு வந்து இந்திய அணி வெற்றிப் பெற்றது தான் இந்த போட்டியின் ஹைலைட். ஜேம்ஸ் ஆண்டர்சனுக்காக பும்ராவை பழி வாங்க நினைத்து, இங்கிலாந்து தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டது உண்மைதான் என்றாலும், அதையும் தாண்டி தோல்விக்கான முக்கிய காரணம் இருக்கிறது. அது அந்த அணியின் மோசமான பேட்டிங். கேப்டன் ஜோ பரூட் தவிர, ஒருவர் கூட உருப்படியாக பேட்டிங் செய்வதில்லை. 50 ரன்கள் அடிப்பதற்குள்ளேயே மூச்சு வாங்குகின்றனர். அதேபோல், பவுலிங்கில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஓலே ராபின்சன் சிறப்பாக பந்து வீசுகின்றனர். ஆனால், இவர்கள் இருவர் மட்டும் தான் சிறப்பாக வீசுகின்றனர். காயம் காரணமாக வெளியேறிய ஸ்டூவர்ட் பிராட்டுக்கு பதில் களமிறங்கிய மார்க் வுட் பந்தில் பவுன்ஸ் இருக்கிறதே தவிர, இம்பேக்ட் இல்லை. அவரால் பவுலிங்கில் எந்த தாக்கமும் ஏற்படுத்த முடியவில்லை. இந்நிலையில், வரும் ஆக.25ம் தேதி ஹெட்டிங்லேவில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதில், இங்கிலாந்து நான்கு முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

3 ஆண்டுகளுக்கு பிறகு
இதில், முதல் மாற்றமாக டேவிட் மலன் அணிக்குள் வரவிருக்கிறார். கடந்த 2018ம் ஆண்டுக்கு பிறகு, மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு விளையாட அவர் அழைக்கப்பட்டுள்ளார். டாம் சிப் லே அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், டேவிட் மலன் அணியின் இணைந்துள்ளார். நிச்சயம் இது இங்கிலாந்து அணிக்கு இது ஃப்ரெஷ்ஷான மாற்றமாக இருக்கும். குறிப்பாக, ஒன் டவுன் வீரராக.. அதாவது நம்பர்.3 இடத்தில் அவர் களமிறங்க உள்ளதாக தெரிகிறது.

5 ஆண்டுகள்
ஹஸீப் ஹமீத் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஆனால் அவர் அதை ஒரு டவுனில் விளையாடினார். இப்போது டேவிட் மலன் வருகை தந்திருப்பதால், ஹமீத் தொடக்க வீரராக களமிறக்கப்படுவார் என்று தெரிகிறது. ஏறக்குறை 5 ஆண்டுகள் கழித்து, இப்போது அவருக்கு மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அவருடைய போதாத காலம்.. அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அணிக்கு தேவையான பங்களிப்பை கொடுக்க முடியவில்லை. ஹஸீப் ஹமீத் நேச்சுரலாக தொடக்க வீரர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஸோ, நிச்சயம் அவருக்கு ஏற்ற பேட்டிங் ஸ்லாட் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

சகிப் மஹ்மூத்
இங்கிலாந்து பவுலிங் குறித்து நாம் ஏற்கனவே பேசியிருந்தோம். அதன்படி, பெரியளவில் இம்பேக்ட் ஏற்படுத்த முடியாததால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மார்க் வுட்-க்கு பதிலாக, சகிப் மஹ்மூத் அணியில் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. கடந்த பாகிஸ்தான் தொடரில் அவர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நிலையில், சகிப் அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.
Recommended Video

சுட்டிக் குழந்தை நீக்கம்?
கடைசி மாற்றமாக, இங்கிலாந்து அணியில் ஆல் ரவுண்டர் கிரெய்க் ஓவர்டன் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. அதாவது 'சுட்டிக் குழந்தை' சாம் கர்ரனுக்கு பதிலாக, கிரெய்க் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. சுட்டிக் குழந்தை பவுலிங்கில் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதனால், ஓவர்டன் நிச்சயம் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றியை நழுவவிட்டதால் அந்நாட்டு மீடியாக்கள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், இந்த நான்கு மாற்றங்களும் மிக முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகிறது. பொதுவாக, இங்கிலாந்து செல்லும் போது, இந்திய அணியில் தான் இப்படி வீரர்கள் அடிக்கடி மாற்றப்படுவார். ஏனெனில், இங்கிலாந்தை சமாளிக்க முடியாமல் தடுமாறும் இந்தியா, வீரர்களை அடிக்கடி மாற்றும். இந்த முறை வரலாறு சற்று திருத்தி எழுதப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications