உலககோப்பை இந்திய அணியில் அஸ்வின் ஏன் சேர்ப்பு? 4 முக்கிய காரணம்.. டிராவிட் மாஸ்டர் ஸ்ட்ரோக்
மும்பை : ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான அணியை அறிவிக்க இன்று கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் இந்திய அணியில் காயமடைந்த அக்சர் பட்டேல் அதிரடியாக நீக்கப்பட்டு தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
37 வயதான அஸ்வின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டது. ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டின் மாஸ்டர் ஸ்ட்ரோக்காக பார்க்கப்படுகிறது. அஸ்வின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டதற்கு மிக முக்கிய மூன்று காரணம் இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

இந்திய ஆடுகளங்களில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்களுக்கு ஆப் ஸ்பின்னர் மிகவும் முக்கியம். வலது கை ஆப் ஸ்பின்னர்கள் இருப்பதன் மூலம் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். அது மட்டுமல்லாமல் அஸ்வின் ரன்களை கட்டுப்படுத்துவதிலும் வல்லவர். ஒரு முனையில் அஸ்வின் ரன்களை கசிய விடாமல் கட்டுப்படுத்தினால் மறுமுனையில் இந்த நெருக்கடியில் பயன்படுத்தி மற்ற பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்க முடியும்.
அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டதற்கு முக்கிய காரணம் அவர் இடது கை பேட்ஸ்மேன் விக்கெட்டை அதிக அளவில் எடுக்கக் கூடியவர். அஸ்வினை பார்த்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீர டேவிட் வார்னரே இடது கையில் இருந்து வலது கை பேட்ஸ்மேனாக மாறி விளையாடினார் என்றால் அவருடைய திறமையை பார்த்துக் கொள்ளுங்கள். உலக கோப்பை கிரிக்கெட் அணியில் பல இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அவர்களுடைய விக்கெட்டை வீழ்த்துவதற்காகவே அஸ்வின் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டதற்கு மூன்றாவது காரணம். அவர் வெறும் சுழற் பந்துவீச்சாளர் மட்டுமல்ல பேட்டிங்கும் நன்றாக விளையாட கூடியவர். ஒரு நாள் போட்டிகளில் 63 முறை பேட்டிங் செய்துள்ள அஸ்வின் 707 ரன்களை அடித்திருக்கிறார். இதில் ஒரு அரை சதம் அடங்கும். அஸ்வின் கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங் திறமையை அதிகப்படுத்தி இருக்கிறார். சர்வதேச டெஸ்டில் மட்டும் அவர் ஐந்து சதங்கள், 14 அரை சதம் அடித்திருக்கிறார். இதனால் கீழ் வரிசையில் அஸ்வின் இருப்பு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
மேலும் அஸ்வின் இரண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடிய அனுபவம் உடையவர். 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற போது அஸ்வின் அதில் முக்கிய வீரராக இருந்திருக்கிறார். அந்தத் தொடரில் அஸ்வின் இரண்டு போட்டிகளில் விளையாடி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதேபோன்று 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் எட்டு போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் அஸ்வினுடைய அனுபவம் நிச்சயம் கை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications