சென்னை: இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 4வது ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாசில் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
தொடரை கைப்பற்றிவிட்டதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டஉள்ளன. சர்துல் தாக்கூர் (முதல் போட்டி), குல்தீப் யாதவ், மனிஷ் பாண்டே ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, சஹல், புவனேஸ்வர்குமார், ஜாதவ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
மானத்தை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் இலங்கையும், 3 மாற்றங்களை செய்துள்ளது. ஹசரங்கா, முனவீரா, புஸ்பகுமாரா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடைசி இருவருக்கும் இதுதான் முதல் போட்டியாகும். கப்புகதெரா, சண்டிமால், சமீரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 375 ரன்களை குவித்தது. ரோகித் ஷர்மா 104 மற்றும் கோஹ்லி 131 ரன்களை குவித்தனர். மனிஷ் பாண்டே 50 ரன்களுடனும், டோணி 49 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர்.