4வது டெஸ்ட்டும் இங்கிலாந்துக்கே... இந்தியா படு தோல்வி.. 3வது நாளிலேயே ஆட்டம் முடிந்த பரிதாபம்!
மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா படு தோல்வி அடைந்துள்ளது. இந்தியாவை ஒரு இன்னிங்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னணி பெற்றுள்ளது.
அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றாலும் தொடரை வெல்ல முடியாது. அதேசமயம், இங்கிலாந்து அடுத்த போட்டியை டிரா செய்தால் கூட போதும், தொடரை வெல்லும்.
இந்திய வீரர்களின் மகா மோசமான ஆட்டம் காரணமாகவே 4வது போட்டியில் இந்தியா பெரும் தோல்வியைச் சந்திக்க நேரிட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலிதான் மீண்டும் இந்தியாவுக்கு எமனாக வந்து சேர்ந்தார்.
போட்டி முடிய இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் 3வது நாளிலேயே இந்த டெஸ்ட் போட்டி சுருண்டு போனது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர்.

தொடர்ச்சியான 2வது தோல்வி
ஏற்கனவே இந்தியா 3வது டெஸ்ட் போட்டியில் தோல்வியுற்றது. தற்போது 4வது போட்டியிலும் தோற்றுள்ளது.

டீ சாப்பிட்டதும் தோல்வி
3வது நாள் ஆட்டத்தில், தேநீர் இடைவேளைக்குப் பின்னர் இந்தியாவின் 2வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

ரொம்பக் கேவலம் என்னவென்றால்
இதில் 21 பந்துகளில் 13 ரன்களை மட்டுமே எடுத்து 5 விக்கெட்களை இந்தியா பறி கொடுத்ததுதான் ரொம்பக் கேவலமான ஹைலைட்டாகும்.

மொயீன் அலி
3வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்களைச் சாய்த்து இந்தியாவை வீழ்த்தக் காரணமாக அமைந்த மொயீன் அலி, 4வது போட்டியில் 4 விக்கெட்களைச் சாய்த்து இந்தியாவுக்கு சேதாரத்தை ஏற்படுத்தி விட்டார்.

ஸ்டூவர்ட் பிராட் முதல் அடி
ஆனால் ஸ்டூவர்ட் பிராட்தான் இந்தியாவின் சரிவுக்கு முக்கியக் காரணம். அவர் இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களைச் சாய்த்து அதிர வைத்தார். இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 152 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 367 ரன்களைக் குவித்தது.

ரொம்ப மோசம்- டோணி
இந்தியாவின் பேட்டிங் மிகவம் மோசமாக இருந்ததாக கேப்டன் டோணி தெரிவித்துள்ளார். இதுவே தோல்விக்குக் காரணம் என்றும் அவர் ஒத்துக் கொண்டுள்ளார். இந்தத் தொடரில் இதுவரை நமது பேட்டிங் சரியாக கிளிக் ஆகவில்லை என்றும் டோணி கூறியுள்ளார்.

கோஹ்லி வேஸ்ட்
விராத் கோஹ்லி தொடர்ந்து சொதப்பி வருகிறார். 4வது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் முட்டை போட்ட அவர் 2வது இன்னிங்ஸில் 7 ரன்களை மட்டுமே எடுத்தார்.

அஸ்வின் மட்டும் ஆடி என்ன புண்ணியம்
சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மட்டுமே 2வது இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்தவர். அவர் ஆட்டமிழக்காமல் 46 ரன்களை எடுத்திருந்தார். முதல் இன்னிங்ஸில் டோணியும், அஸ்வினும் மட்டுமே கொஞ்சமாவது ஆடி மான இழப்பை ஓரளவு குறைத்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்தியா தனது 2வது இன்னிங்ஸில் 161 ரன்களுக்குச் சுருண்டது. ஸ்டூவர்ட் பிராட், ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓவலில் கடைசி டெஸ்ட்
5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications