
கங்குலி-டிராவிட் ஜோடி
1996ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இலங்கையுடன், 1999 உலக கோப்பையில் மோதும்போது இந்திய அணி எப்படி நெருக்கடியில் சிக்கியிருந்திருக்கும் என்று சொல்லி தெரியவில்லை. சமிந்தா வாஸ், முத்தய்யா முரளிதரன் போன்ற முன்னணி பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டு ஒரு அசைக்க முடியாத சாதனையை செய்தனர் கங்குலியும், டிராவிட்டும். இருவரும் இணைந்து 318 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தது ஐசிசி உலக கோப்பை வரலாற்றில் சாதனையாகும்.

முரளிதரனுக்கு மூச்சு முட்டியது
முதல் ஓவரிலேயே ஓப்பனர் சடகோபன் ரமேஷ் விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், ஒன்-டவுனில் களமிறங்கினார் தடுப்பு சுவர் டிராவிட். மற்றொரு ஓப்பனர் கங்குலியுடன் கைகோர்த்தார். அதன்பிறகு அதிரடி சரவெடிதான். முதல் ஓவரில் விக்கெட்டை இழந்த இந்தியா, 45 ஓவரில்தான் தனது அடுத்த விக்கெட்டை விட்டுக்கொடுத்தது என்றால் இருவரின் பார்ட்னர்ஷிப்பால் இலங்கை வீரர்கள் எப்படி நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம். மட்டை போடும் டிராவிட்டே 129 பந்துகளில், 145 ரன்கள் குவித்தார். கங்குலி 158 பந்துகளில் 183 ரன்கள் விளாசினார். முரளிதரன் பந்துகளை ஸ்டேடியத்தை தாண்டி வெளியே அனுப்புவதிலே குறியாக இருந்தார் கங்குலி. 373 ரன்களை குவித்த இந்தியா, இலங்கையை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

சுனில்கவாஸ்கர்
கட்டை மன்னன் கவாஸ்கர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாரா என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அப்படியும் ஒரு சம்பவம் நடந்தது. 1987ம் ஆண்டு உலக கோப்பை ஆசியாவில் நடைபெற்றது. 50 ஓவர்களாக குறைக்கப்பட்ட பிறகு நடந்த முதல் உலக கோப்பை கிரிக்கெட் இதுவாகும். நியூசிலாந்தை அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வீழ்த்தினால், அரையிறுதியில் இங்கிலாந்தை இந்தியாவில் வைத்து சந்திக்கலாம், இல்லாவிட்டால், அரையிறுதியில் பாகிஸ்தானை லாகூரில் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற நிலை.

அபார வெற்றி
அதிரடியாக விளையாடிய கவாஸ்கர் 85 பந்துகளில் 100 ரன்களை கடந்தார். இந்தியா 32.1 ஓவர்களில் வெற்றி பெற்று அசத்தியது. முந்தைய போட்டியில்தான் கவாஸ்கர் ஜிம்பாப்வேக்கு எதிராக 114 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். ரன் ரேட் குறைந்ததற்கு அதையே காரணமாக பலரும் குத்திக் காட்டி பேச, கவாஸ்கர் தனது ஒருநாள் போட்டி திறமையை நியூசிலாந்துக்கு எதிராக காண்பித்தார்.

உலக நாயகனே..
உலக கோப்பை நாயகன் கபில்தேவை விட்டுவிட முடியுமா. 1983ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா வெல்ல ஆதி காரணம் அவர்தானே. வென்றேயாக வேண்டிய லீக் போட்டியில், குட்டி அணியான ஜிம்பாப்வேக்கு எதிராக 9 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. அப்போதுதான் கபில் உள்ளே வந்தார். ஆனால் 17 ரன்களுக்குள் இந்தியா ஐந்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஆனால் 60 ஓவர்கள் முடிவடைந்தபோது இந்தியாவின் ஸ்கோர் 266 ரன்ககள். இழந்ததோ 8 விக்கெட்டுகள்தான். காரணம், ஆட்டமிழக்காமல், 138 பந்துகளில் கபில்தேவ் குவித்த 175 ரன்களாகும். கேப்டன் கபில்தேவின் தீரமிகு இந்த ஆட்டம் பிற வீரர்களுக்கும் உற்சாகத்தை தந்து உலக கோப்பையை வெல்ல செய்தது என்பதே உண்மை.

கேப்டன் மிஸ்டர் கூல்
கபில்தேவுக்கு அடுத்தபடியாக உலக கோப்பையை இந்தியாவுக்கு வாங்கித் தந்த கேப்டன் டோணியும் முக்கியமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுவும் உலக கோப்பை இறுதி போட்டியில். 2011 உலக கோப்பை இறுதி போட்டியில், இலங்கை முதலில் பேட்டிங் செய்து 274 ரன்களை குவித்தது.

அடுத்தடுத்து சரிவு
இரண்டாவது பேட்டிங் செய்த இந்தியாவின் அதிரடி வீரர் சேவாக் டக் அவுட் ஆக, வான்கடே ஸ்டேடியமே மவுனத்தில் ஆழ்ந்தது. அடுத்ததாக 18 ரன்களில் லோக்கல் ஹீரோ சச்சின் அவுட் ஆக தலையில் துண்டை போட்டபடி உட்கார்ந்தனர் இந்திய ரசிகர்கள். சிறப்பாக ஆடத்தொடங்கிய கோஹ்லி, தில்ஷன் பந்து வீச்சில் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

மாஸ் ஹிட்
இந்தியா 114 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, யுவராஜுக்கு பதிலாக திடீரென களத்தில் இறங்கினார் கேப்டன் டோணி. முதலில் சிங்கிள்கள் ஓட, மறுமுனையில் அதிரடி காண்பித்தார் கவுதம் கம்பீர். 97 ரன்களில் கம்பீர் அவுட் ஆன நிலையில், 24 பந்துகளில், இந்தியாவுக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. கியரை மாற்றினார் டோணி. 3 பவுண்டரிகள் பறந்தன. 12 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்தால் போதும் என்ற நிலைக்கு முன்னேறியது இந்தியா. அப்போதுதான் கிளம்பியது அந்த ஹெலிகாப்டர் ஷாட். உலக கோப்பை இறுதி போட்டியில் இப்படி ஒரு அசத்தலான ஷாட் மூலம் வெற்றி பெற்ற ஒரே அணி இந்தியாவாகத்தான் இருக்கும்.

சோயிப் தூக்கத்தை கெடுத்த சச்சின்
உலகின் அதிவேக பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், இந்த போட்டிக்கு பிறகு எத்தனையோ நாட்கள் தூக்கத்தில் எழும்பி புலம்பியுள்ளார். அவருக்கு சிம்ம சொப்பனமாக நின்றது வேறு யாருமல்ல, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்தான். சவடால் விடும் பேர்வழிகளுக்கு பேட்டால் பதிலடி தருவது சச்சின் வாடிக்கை. 2003 உலக கோப்பையின்போது அப்படித்தான் நடந்தது.

பவுலர்கள் ஆதிக்கம்
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 273 ரன்களை குவித்தது. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயிப் அக்தர் என மிரட்டல் பவுலிங்கை கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு எதிராக இந்த பெரிய ஸ்கோரை தென் ஆப்பிரிக்க மைதானத்தில் எட்டிப்பிடிப்பது எப்படி என கவலையில் ஆழ்ந்தனர் இந்திய அணியினர்.

சச்சின் சரவெடி
ஆனால் நடந்ததோ வேறு, முதல் ஓவரில் இருந்தே அங்கு அதிரடி, சரவெடியாக வெடித்தது. சேவாக்கிற்கு பதிலாக தானே முதலில் ஸ்டிரைக்கை தேர்ந்தெடுத்தார் சச்சின். அக்ரமின் முதல் 2 பந்துகள் டாட். 3 வது பந்து அருமையான ஷாட் மூலம் பவுண்டரிக்கு விரட்டப்பட்டது. கடைசி பந்தும் பவுண்டரிக்கு போனது.

எவ்ளோ பெரிய சிக்ஸ்..
சோயிப் அக்தரின் ஓவரில் சச்சின் பாயிண்ட் பகுதியை தாண்டி அடித்த சிக்சர், கிரிக்கெட் ரசிகர்கள் நினைவில் இருந்து விலக வெகுகாலம் பிடித்தது. அன்றைய சேசிங் முழுக்க சச்சினால்தான் நடந்தது. இறுதி நேரத்தில் யுவராஜ் சிங், ராகுல் டிராவிட் இருவரும் பொறுப்பாக ஆடி வெற்றியை வசப்படுத்தினர்.


Click it and Unblock the Notifications