ஐந்து கிரிக்கெட் கில்லாடிகளும், அவர்கள் "டாடி" ஆன கதையும்!
சென்னை: கிரிக்கெட் உலகத்திற்கு இது ஹேப்பி டாடி சீசன் போல. ஆளாளுக்கு டாடி ஆகி வருகிறார்கள். குழந்தையும் கையுமாக பேபி சிட்டர்களாக, சமத்து அப்பாக்களாக காட்சி தரும் அந்த அற்புதக் காட்சியை கிரிக்கெட் ரசிகர்கள் கண்டு களிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த டாடி ஆகும் படலத்தை ஆரம்பித்து வைத்தவர் நம்முடைய பாசத்துக்குரிய தம்பி டோணிதான். அவர் தான் முதலில் தந்தை ஆனவர். அவரைத் தொடர்ந்து மேலும் சில கிரிக்கெட் பிரபங்கள் தந்தைக்குலங்கள் ஆனார்கள்.
கடந்த ஐந்து மாதத்தில் ஐந்து கிரிக்கெட் பிரபலங்கள் தந்தை ஆகியுள்ளனர். அந்த சுவாரஸ்ய கதை இதோ...

உலகக் கோப்பைப் போட்டித் தொடரின்போது
உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின்போது கேப்டன் டோணி தந்தையானார். அவரது மனைவி சாக்ஷி அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். மகளைக் கூட பார்க்க வராமல் விளையாடுவதே முக்கியம் என்று வைராக்கியமாக இருந்து போட்டித் தொடரை முடித்து விட்டுத்தான் ஊர் திரும்பி மகளைத் தூக்கிக் கொஞ்சினார் டோணி.

பேட்டியும் கையுமாக
முன்பெல்லாம் பேட்டும் கையுமாக அலைந்த டோணி தற்போது ஓய்வில் இருப்பதால் பேட்டியும், கையுமாக ஜாலியாக உலா வந்து கொண்டுள்ளார். கூடவே பெருமை பொங்க அப்பாவையும், மகளையும் ரசித்துக் கொண்டிருக்கிறார் சாக்ஷி.
வாட்சன் டாடி
அடுத்த டாடி ஷேன் வாட்சன். இவருடைய மனைவி மெடில்டாவுக்கு கடந்த மே மாதம்தான் குழந்தை பிறந்தது. அதுவும் பெண் குழந்தைதான். மகள் மீது
பாசத்தைப் பொழிந்தபடி இருக்கிறாராம் வாட்சன்.
ஷமிக்கும் பெண் குழந்தை
அதேபோல ரம்ஜான் பண்டிகையன்று இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகம்மது ஷமிக்கும் பெண் குழந்தை பிறந்தது. அப்போது அணியில் இடம் பெறவில்லை என்பதால் மனைவியுடன் கூடவே இருந்துள்ளார் ஷமி.
ஏப் டிவில்லியர்ஸ்
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் ஏப் டிவில்லியர்ஸுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு ஏப் என்று பெயரிட்டுள்ளனர் டிவில்லியர்ஸ் தம்பதியினர்.

ரோட்ஸின் "இந்தியா"
இந்த வரிசையில் ஒரு முன்னாள் கிரிக்கெட் பிரபலமும் கூட்டத்தோடு கூட்டமாக அப்பாவாகி விட்டார். தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஜான்டி ரோட்ஸின் மனைவிக்கு கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் குழந்தை பிறந்தது. அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஐபிஎல் போட்டிகளில் பிசியாக இருந்தார் ரோட்ஸ். இந்தியாவில் பிறந்ததால் தனது மகளுக்கு இந்தியா என்றே பெயர் வைத்து விட்டார்.

45 வயதில் முதல் முறையாக டாடீ!
45 வயதாகும் ரோட்ஸுக்கு பிறந்த முதல் குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக கிரிக்கெட் உலகம் கிரிக்கெட் போட்டிகளோடு பிரபலங்கள் டாடி ஆன தருணங்களையும் ரசித்துப் பார்த்தது.


Click it and Unblock the Notifications