மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வென்ற நிலையில், அந்த அணியில் இடம் பெற்று இருந்த 15 இந்திய வீரர்களில் ஐந்து வீரர்கள் இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை என்ற தகவல் ஒன்று பரவலாக பேசப்படுகிறது. அந்த சுவாரசிய தகவலை பற்றி இங்கே காணலாம்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அபாரமாக ஆடி நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையையும் கைப்பற்றியது. 2024 டி20 உலக கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி என இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளது.

ஆனால் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் பெற்று இருந்த ஐந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பை வெல்லவில்லை. அந்த ஐந்து வீரர்கள் யார் என்று பார்க்கலாம்.
விராட் கோலி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் துவக்கம் முதலே விளையாடி வருகிறார் கோலி. விராட் கோலி 2008 முதல் 2025 வரை அவர் அந்த அணியில் இடம்பெற்று விளையாடி வரும் நிலையில், இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை.
கே எல் ராகுல் - இந்திய ஒரு நாள் அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு அடுத்து முக்கிய அனுபவ வீரராக இருப்பவர் கே.எல்.ராகுல். அவர் ஐபிஎல் தொடரில் இதுவரை நான்கு அணிகளில் விளையாடியிருக்கிறார். ஆனால் இதுவரை அவராலும் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை.
அவர் முதன் முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்றிருந்தார். அதன் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பின்னர் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் என பல அணிகளுக்கு மாறி, மாறி விளையாடி உள்ளார். தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கிறார். அவரும் இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை.
ரிஷப் பண்ட் - அடுத்து நட்சத்திர வீரராக இருக்கும் ரிஷப் பண்ட் இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை. அவர் 2016 முதல் 2024 வரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பெற்று ஆடி வந்தார். இந்த ஆண்டுதான் அந்த அணியில் இருந்து அவர் விலகி இருக்கிறார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லாத அணியாகவே உள்ளது. ரிஷப் பண்ட் இந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் நிலையில் கோப்பை வெல்வாரா? என பார்க்கலாம்.
அர்ஷ்தீப் சிங் இந்திய டி20 அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக இருக்கிறார். இந்திய டி20 அணியில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் இருக்கிறார். ஆனால், அவர் இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை. 2019 முதல் ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாடி வருகிறார் அர்ஷ்தீப். அப்போது முதல் அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவரது தனிப்பட்ட ஆட்டம் சிறப்பாக இருந்த போதும் அந்த அணி இதுவரை கோப்பை வெல்லவில்லை.
வாஷிங்டன் சுந்தர் - தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இதுவரை மூன்று ஐபிஎல் அணிகளில் இடம் பெற்று ஆடி இருக்கிறார். ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளில் அவர் ஆடி இருக்கிறார். அவரும் இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை. 2025 ஐபிஎல் தொடரில் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கிறார்.