டி20 உலககோப்பையிலிருந்து 5 பேர் நீக்கம்.. பிசிசிஐ அதிரடி நடவடிக்கை.. வாய்ப்பு போனது எதனால்?
மும்பை : ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து 5 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். கடந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கும், இம்முறைக்கும் சரியாக ஒரு வருடம் தான் இடைவெளி உள்ளது.
Recommended Video
இதில் பெரும்பாலான அணிகள், ஒன்று, இரண்டு மாற்றங்களுடன் கடந்த முறை அறிவிக்கப்பட்ட அதே அணியை தான் இம்முறையும் அறிவித்துள்ளது.
ஆனால் இந்திய அணி மட்டும் 5 பேரை அதிரடியாக நீக்கியுள்ளது. இதில் ஜடேஜா காயம் காரணமாக இடம்பெறாத நிலையில், மற்ற 4 வீரர்கள் குறித்து தற்போது காணலாம்.

இஷான் கிஷன்
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி விக்கெட் கீப்பராக அறியப்பட்ட இஷான் கிஷன், கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான மெயின் அணியில் இடம் பிடித்தார். ஆனால், நடப்பாண்டில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கு காரணம், தினேஷ் கார்த்திக்கின் வருகை, கிஷனின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது. இதனால், இஷான் கிஷனுக்கு தென்னாப்பிரிக்க தொடருக்கு பிறகு பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

ராகுல் சாஹர்
கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பெரும் எதிர்பார்ப்புடன் ராகுல் சாஹர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் தேர்வுக்குழுவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மேலும், கடந்த ஆண்டு சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது அவர் அணிக்கு திரும்பிவிட்டதால், ராகுல் சாஹரின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. மேலும், நடப்பு ஐபிஎல் சீசனில் கூட அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

ஷர்துல் தாக்கூர்
இந்திய அணியின் லார்ட் ஷர்துல் தாக்கூர் என்று கடந்த ஆண்டு ரசிகர்களால் பாராட்டப்பட்டார். கடந்த உலகக் கோப்பை தொடரில் ரிசர்வ் வீரர் இடத்திலிருந்து மெயின் அணிக்கு மாற்றப்பட்டார். ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. நடப்பாண்டிலும் தனது பழைய பார்ம்மை அவர் வெளி கொண்டு வரவே இல்லை. இதனால் இம்முறை ரிசர்வ் அணியில் கூட இடமில்லை.

வருண் சக்ரவர்த்தி
இந்திய கிரிக்கெட் அணிக்கு புயலாய் வந்து புஸ்வானமாக மாறியவர் வருண் சக்ரவர்த்தி. இவரது பந்துவீச்சை தொட கூட முடியவில்லை. விக்கெட்டையும் கொத்தாக எடுத்தார். இதனை நம்பி தேர்வுக்குழு சாஹலுக்கு வாய்ப்பு தராமல், வருண் சக்ரவர்த்திக்கு கொடுத்தது. ஆனால் அந்த பொன்னான வாய்ப்பை அவர் வீணடித்ததால் அதன் பிறகு இந்திய அணியிலேயே வாய்ப்பு கிடைக்கவில்லை.


Click it and Unblock the Notifications