சென்னை: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி டாடா ஐபிஎல் 2023 சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. நான்கு வருட இடைவேளைக்கு பிறகு, சிஎஸ்கே தனது கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி, வெற்றி பெற்றுள்ளது.
இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 217 ரன்களை எடுத்தது. எனினும் லக்னோ அணியும் சிஎஸ்கேவின் இலக்கு அருகில் வரை வந்து, வெறும் 12 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோல்வியை தழுவியது.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றாலும் சிஎஸ்கே கற்றுக்கொண்ட 5 முக்கிய பாடங்கள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
1 . தோனி பினிஷிங் டச்:
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 'கோட்டை சேப்பாக்கிற்கு' எம்.எஸ். தோனி திரும்பியதால், ரசிகர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியாக இருந்தது. "Dhoni Dhoni" என்ற கோஷம் மைதானம் முழுவதும் கரகோஷமாக ஒலித்தது. அதுவும் கடைசி ஓவரில் மார்க் வுட் பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை அடித்ததால், ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். "நாயகன் மீண்டும் வர்றார்" என்ற அளவுக்கு பீப் எகிறியது.
மேலும் நேற்றைய போட்டியில், தோனி ஐபிஎல்-லில் 5000 ரன்களையும் கடந்தார். 41 வயதான அவர் ஒரு சிறந்த கேமியோவுடன் இன்னிங்ஸை முடித்த தொடர்ச்சியான இரண்டாவது போட்டி இதுவாகும், அவர் தனது ஃபார்மை முழுமையாகப் பயன்படுத்த டாப் ஆர்டரில் பேட் செய்ய வேண்டும் என்று பலரும் சமூகவலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

2. ருதுராஜின் ருத்ரதாண்டவம்:
ருதுராஜ் கெய்க்வாட் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 92 ரன்களுக்கு அடித்தார். மேலும் நேற்றைய போட்டியில் ஐபிஎல் 2023 சீசனில் தனது இரண்டாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி, 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்து சிஎஸ்கே அணி 217 ரன்கள் அடிக்க அடித்தளம் அமைத்து கொடுத்தார். கெய்க்வாட்டின் அபாரமான ஃபார்ம், ஐபிஎல் 2023 சீசனில் சிஎஸ்கே கோப்பை வெல்ல உறுதுணையாக இருக்கிறது.

3. சேப்பாக் - ஸ்பின்னர்களின் கோட்டை:
நேற்றைய போட்டியில், வேகப்பந்து வீச்சாளர்கள் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அடித்து நொறுக்கப்பட்ட அதே சமயம், சுழற்பந்து வீச்சாளர்கள் இருபுறமும் பந்து வீசி நட்சத்திர வீரர்களாக உருவெடுத்தனர். ரவி பிஷ்னோய் எல்எஸ்ஜிக்காக சிறப்பாக பந்துவீசினார், தனது நான்கு ஓவர்களில் வெறும் 28 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து சிவம் தூபே, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே சமயம், சென்னை ஸ்பின்னர் களும் சிறப்பாக பந்து வீசினர்.
மொயீன் அலி தனது நான்கு ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிட்செல் சான்ட்னரும் விஷயங்களை இறுக்கமாக வைத்திருந்தார், 21 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.

4.பந்துவீச்சாளர்களை ஆட்டிப்படைக்கும் கைல் மேயர்ஸ்:
கைல் மேயர்ஸ் பவர்பிளேயில் சிஎஸ்கே பந்து வீச்சாளர்களை பதம் பார்த்ததால், இந்த சீசனின் 2 வது போட்டியிலும் தனது அரைசத்தை பூர்த்தி செய்தார். அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களைக் அடித்து கிட்டத்தட்ட CSK விடம் இருந்து ஆட்டத்தை மீட்டார். இன்னும் சில ஓவர்கள் அவர் களத்தில் நின்று இருந்தால், முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும். இனி வரும் போட்டிகளில், இவரை போன்ற மேற்கிந்திய அணி வீரர்கள் எதிரணி கேப்டன்களுக்கு தலைவலியாக அமைவர்.

5. CSK டெத் பந்துவீச்சு தீர்மானிக்கும் :
மூன்று ஓவர்களில் 44 ரன்கள் தேவை என்ற நிலையில், ஆட்டம் சிஎஸ்கே பக்கம் சாய்ந்ததாகத் தோன்றியது. இருப்பினும், கிரீஸில் ஆயுஷ் பதோனி மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் இருந்ததால், LSG வெற்றி வாய்ப்பு யார் பக்கம் சாயும் என்ற பயமும் ரசிகர்களிடம் இருந்தது.

போட்டி ஆரம்பத்தில், சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டி முழுவதும் wide மற்றும் No -ball களை வாரி வழங்கி தோனியின் நம்பிக்கையை பெறவில்லை. இருப்பினும், துஷார் தேஷ்பாண்டே மற்றும் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோர் மூன்று சிறந்த ஓவர்களை டெத்தில் வீசினர், இதனால் CSK வெற்றியை வசதியான வித்தியாசத்தில் உறுதி செய்தது.