மும்பை: ஸ்காட்லாந்தில் 83 வயதாகும் முதியவர் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர் கட்டிக் கொண்டு விக்கெட் கீப்பராக களமிறங்கிய கிரிக்கெட் விளையாடிய வீடியோ ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
"ஏதோவொரு விளையாட்டை பற்றிக் கொள்ளுங்கள்.. அந்த விளையாட்டு உங்களை எந்த சூழலில் இருந்தும் எளிதாக மீட்டு வெளியில் கொண்டு வந்துவிடும்" இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சொல்லி வார்த்தைகள். இந்தியாவில் கிரிக்கெட் கொண்டாடப்படுவதற்கு, அதன் பரபரப்பு மட்டுமல்லாமல், ரசிகர்கள் சொந்த வாழ்க்கையில் அடைந்த தோல்விகளில் இருந்து வெளிவருவதற்கான முக்கிய அம்சமாகவும் இருக்கிறது.

எவ்வளவு பெரிய தோல்வியில் இருந்து கம்பேக் கொடுக்க முடியும் என்பதற்கு இந்தியாவில் கிரிக்கெட் தான் எளிமையான எடுத்துக்காட்டாக உள்ளது. அப்படியான கிரிக்கெட்டை 83 வயதில் முதியவர் ஒருவர் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டரை வைத்துக் கொண்டு விளையாடி இருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.. ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் அலெக்ஸ் ஸ்டீல்.
1967ஆம் ஆண்டு முதலே ஸ்காட்லாந்து நாட்டில் முதல்தர கிரிக்கெட் ஆடி வருபவர் அலெக்ஸ் ஸ்டீல். இவர் ஸ்காட்லாந்து நாட்டின் ஃபார்ஃபோர்ஷையர் அணிக்காக விளையாடி இருக்கிறார். இதுவரை 14 முதல்தர போட்டிகளில் விளையாடிய அவர், அதிகபட்சமாக 97 ரன்கள் சேர்த்துள்ளார். 2 அரைசதங்கள் மற்றும் விக்கெட் கீப்பராக 11 கேட்ச்கள் மற்றும் 2 ஸ்டம்பிங்களை செய்திருக்கிறார்.

அண்மைக் காலமாக நுரையீரல் பிரச்சனை காரணமாக அலெக்ஸ் ஸ்டீல் பிரச்சனைகளை சந்தித்து வந்திருக்கிறார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் இவரால் வாழ முடியாது என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசையில் ஆக்சிஜன் சிலிண்டருடன் போட்டியில் களமிறங்கி உள்ளார் அலெக்ஸ் ஸ்டீல். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவிய நிலையில், கிரிக்கெட் விளையாட வயது ஒரு பெரிய தடையில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.