Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பரபரப்பு கட்டத்தில் பெங்களூர் டெஸ்ட்.. மீண்டும் ஒரு 'கொல்கத்தா மேஜிக்' நிகழ்த்துமா இந்தியா?

பெங்களூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் முடங்கிப் போன இந்திய அணி, தற்போது வெற்றி பெற வீறு கொண்டு போராடி வருகிறது. மீண்டும் ஒரு கொல்கத்தா சாதனையை இந்தியா படைக்குமா என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் சீட்டின் நுனிக்கு வரத் தொடங்கிவிட்டனர்.

புனே டெஸ்டில் படுதோல்வியடைந்த இந்தியா, பெங்களூரில் தற்போது நடைபெற்று வரும் 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சிலும் சோடை போனது. டாசில் வென்று முதலில் பேட் செய்த போதிலும், 189 ரன்களுக்கு படுத்துவிட்டது இந்திய அணி.

முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா திணறியபோதிலும், இந்தியா அளவுக்கு முதலுக்கு மோசமில்லை. மொத்தம் 276 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்ஸ் மோசம்

முதல் இன்னிங்ஸ் மோசம்

87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆரம்பித்த இந்தியாவுக்கு மீண்டும் சறுக்கல்தான் காத்திருந்தது. முதல் இன்னிங்சில் 90 ரன்கள் எடுத்த ராகுல் இம்முறை 51 ரன்கள் விளாசி மானம் காத்தபோதிலும், அபினவ் முகுந்த் 16 ரன்களிலும், கேப்டன் கோஹ்லி 15 ரன்களிலும் நடையை கட்டினர்.

பரிதாபம்

பரிதாபம்

இதன்பிறகு சர்ப்ரைசாக முன்கூட்டியே களமிறக்கப்பட்ட ஜடேஜா 2 ரன்களில் பரிதாபமாக வெளியேற, 120 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்சை போலவே தடுமாறியது இந்தியா. இனி அவ்வளவுதான், பேட்ஸ்மேன்கள் வந்த கையோடு திரும்பிவிடுவார்கள் என இந்திய ரசிகர்கள் மனம் தளர்ந்தனர்.

புஜாரா, ரஹானே

புஜாரா, ரஹானே

ஆனால் அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. 5வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ஜோடி சேர்ந்த அஜிங்ய ரஹானே, இணை அணியை சரிவில் இருந்து மெல்ல, மெல்ல மீட்டது. அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும், தடுக்க வேண்டிய பந்துகளை தடுத்தும் ஆடியது இந்த ஜோடி.

முடியவில்லை

முடியவில்லை

எவ்வளவோ முயன்று பார்த்தும், இந்த ஜோடியை ஆஸ்திரேலிய பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. ஒருநாளும் இல்லாத திருநாளாக, மிட்சேல் மார்ஷை கொண்டு பந்து வீச வைத்து முயன்று பார்த்தார் கேப்டன் ஸ்மித். ம்ஹூம்.. ஒன்றும் நடக்கவில்லை.

அபார பார்ட்னர்ஷிப்

அபார பார்ட்னர்ஷிப்

ஆட்ட நேர இறுதியில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 79 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 250 ரன்கள் முன்னிலை பெற்றால் கூட அதை கடைசி இன்னிங்சில் விரட்டி பிடிப்பது என்பது இந்திய பிட்சுகளில் அசாத்தியம். எனவே அப்படி ஒரு பார்ட்னர்ஷிப்பை இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த தொடரில் இந்தியா 200 ரன்களை தாண்டியதும் இதுதான் முதல் முறை என்பது சிறப்பு.

கொல்கத்தா நினைவிருக்கிறதா

கொல்கத்தா நினைவிருக்கிறதா

2001ல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா நடுவேயான டெஸ்ட் போட்டி, டெஸ்ட் வரலாற்றில் முக்கிய மைல் கல் ஆட்டமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த டெஸ்டில் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி ‘பாலோ-ஆன்' ஆகி 274 பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடியது. வி.வி.எஸ்.லட்சுமண் (281 ரன்), ராகுல் டிராவிட் (180 ரன்) ஆகியோரின் பிரமாதமான ஆட்டத்தால் இந்தியா 657 ரன்கள் சேர்த்தது. அடுத்து 384 ரன்கள் இலக்கை நோக்கி களம் கண்ட ஆஸ்திரேலியா 212 ரன்னில் சுருண்டு தோற்றது. தொடர்ந்து 16 டெஸ்டுகளில் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்திற்கும் இதன் மூலம் இந்தியா முடிவு கட்டியது. இப்போதும் இந்திய ரசிகர்கள் புஜாராவிடமும், ரஹானேவிடமும் அப்படியான ஆட்டத்தை எதிர்பார்க்கிறார்கள். நாளைய ஆட்டம் அதற்கு விடை கூறட்டும்.

Story first published: Monday, March 6, 2017, 17:39 [IST]
Other articles published on Mar 6, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+