சஞ்சு சாம்சனா? இசான் கிஷனா? வைபவ் சூர்யவன்ஷிக்கு பதில் யாரை சேர்க்கனும்? ஆகாஷ் சோப்ரா கருத்து
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில், வைபவ் சூர்யவன்ஷியை விளையாட வைப்பதற்காக சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷனை நீக்குவது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். . அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தொடரின் இரண்டாவது மற்றும் இறுதிப் போட்டி அதே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஆகாஷ் சோப்ரா, வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்தாலும், சஞ்சு மற்றும் இஷான் கிஷனுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் "அடுத்த போட்டியில் வைபவ் விளையாட வேண்டுமா என்பது ஒரு கடினமான கேள்வி. இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் முதல் போட்டியில் ரன்கள் எடுக்கவில்லை. அபிஷேக் சர்மாவைத் தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. இதனால் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன" என்றார்.

"இது ஒருவேளை விமர்சனங்களை ஏற்படுத்தினாலும், நான் இன்னும் வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்க மாட்டேன். சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷனை நீக்க மாட்டேன். அதே டாப் 3 பேட்டிங் வரிசையையே மீண்டும் களமிறக்குவேன், அடுத்த போட்டியில் நிச்சயம் வேறுவிதமான முடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன். அடுத்த முறை நாம் முதலில் பேட்டிங் செய்தால் 250 ரன்கள் வரை கூட அடிக்கலாம். அதற்கான தகுதி நம் பேட்ஸ்மேன்களிடம் உள்ளது" என்று சோப்ரா தெரிவித்துள்ளார். முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் 4 பந்துகளில் 5 ரன்களும், இஷான் கிஷன் 5 பந்துகளில் 1 ரன்னும் மட்டுமே எடுத்தனர். அபிஷேக் சர்மா மட்டுமே 20 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.
"சஞ்சு சாம்சன் குறித்து சற்று கவலையடைகிறேன்" - ஆகாஷ் சோப்ரா
"சஞ்சு குறித்து நான் சற்று கவலைப்படுகிறேன். சூர்யவன்ஷிக்கு அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால், சஞ்சு அல்லது இஷான் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற வேண்டும். அணி தோல்வியடையும் போது தான் விமர்சனங்கள் அதிகம் எழும். அப்போது வெளியில் அமர்ந்திருக்கும் வீரர் சிறந்தவராகத் தெரிவார். அவர் உள்ளே வந்தால் போட்டியை வென்று தருவார் என்று அனைவரும் நம்புவார்கள், ஆனால் அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.
"இத்தகைய சூழ்நிலையில் சஞ்சு சாம்சன் ரன் எடுக்காமல் அவுட் ஆனது நல்லதல்ல. இஷான் கிஷனும் அவுட் ஆனார், ஆனால் அவர் சமீபத்தில் தான் ஒரு நாள் போட்டியில் சதம் அடித்துள்ளார். எனவே இஷான் கிஷனுக்கு ஓரளவுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று நினைக்கிறேன். சஞ்சுவின் அதிர்ஷ்டம் பொதுவாகவே அவருக்கு சாதகமாக இருப்பதில்லை" என்று சோப்ரா கவலை தெரிவித்துள்ளார்.
"சஞ்சுவுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. நீங்கள் கார் ஓட்டும்போது பின்னால் உள்ள கண்ணாடியில் மற்றொரு வாகனம் மிக வேகமாக உங்களை நெருங்கி வருவதைப் பார்ப்பது போன்ற உணர்வு சஞ்சுவுக்கு இருக்கும். அந்த அழுத்தத்தை அவர் தற்போது உணர்வார். அடுத்த போட்டியில் அவர் ரன்களை குவிப்பார் என்று நம்புகிறேன்" என்று அவர் கூறினார். சஞ்சு சாம்சன் இதுவரை 55 டி20 போட்டிகளில் விளையாடி 28.08 சராசரியுடன் 1,404 ரன்கள் எடுத்துள்ளார். முதல் போட்டியில் அவர் ஏமாற்றம் அளித்தாலும், இந்தியாவின் டி20 உலகக் கோப்பை 2026 வெற்றிப் பயணத்தின் கடைசி மூன்று போட்டிகளில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

