"கிரிக்கெட்டின் அழிவு இது".. பாகிஸ்தானை போல மாறி வருகிறதா இந்தியா??.. ஆகாஷ் சோப்ரா மன வேதனை!
மும்பை: இந்தியாவில் உள்ள கிரிக்கெட் மைதானங்கள் கவலைக்கிடமாக மாறி வருவதாகவும், இது கிரிக்கெட்டிற்கே நல்லதல்ல என்றும் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற 3வது போட்டியில் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவருமே அதிரடியாக விளையாட, எப்படியும் 400 ரன்களுக்கு மேல் அடித்துவிடும் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கடைசி நேரத்தில் விக்கெட்கள் விழுந்ததால் 385 ரன்களாக குறைந்தது.

அசுர பலத்தில் இந்தியா
இந்த வெற்றியின் மூலம் ரோகித் சர்மா தலைமையிலான படை ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. 50 ஒவர் உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் தான் நடைபெறவுள்ள சூழலில் இந்தியாவின் இந்த வெற்றிகள் நல்ல அறிகுறிகளை கொடுக்கிறது. குறிப்பாக பேட்டிங்கில் தொடர்ச்சியாக 300 ரன்களை குவித்து பலத்தை காட்டி வருகின்றனர்.

ஆகாஷ் சோப்ரா கவலை
இந்நிலையில் இந்திய பிட்ச்-கள் குறித்து ஆகாஷ் சோப்ரா குறை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஏதாவது ஒரு போட்டியில் 400 ரன்களுக்கு அருகில் சென்றால் பரவாயில்லை. ஆனால் கடந்த 6 போட்டிகளில் கவுகாத்தி, திருவனந்தபுரம், ஐதராபாத், இந்தூர் என 4 இடங்களில் கிட்டத்தட்ட 400 ரன்களை நெருங்கிவிட்டனர். இது கிரிக்கெட்டிற்கு நல்லதே கிடையாது.

சுவாரஸ்யமே இருக்காது
இதுபோன்ற பிட்ச்-களில் ஒருநாள் கிரிக்கெட் நடைபெற்றால் சுப்மன் கில், ரோகித் இருவரில் நிச்சயம் ஒருவர் நிறைய ரன்களை அடிப்பார். ஒருவேளை இருவரும் அடிக்கவில்லை என்றால் விராட் கோலி நாசம் செய்துவிடுவார். அதிரடியாக ஆடுவது மட்டும் தான் தேவையென்றால் உங்களுக்கு நிறைய பிட்ச்-கள் கிடைத்துவிடும். ஆனால் சுவாரஸ்யம் என்பது குறைந்துவிடும்.

உலகக்கோப்பை தொடர்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கு தான் நடைபெறவுள்ளது. இப்படி இருக்கையில் இங்கு 400 ரன்களை சுலபமாக அடிக்கலாம் என்றால் எப்படி நல்லதாக எடுத்துக்கொள்வீர்கள். ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் தான் முக்கியம். எனவே இதனை சரி செய்ய வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கோரியுள்ளார். பாகிஸ்தானிலும் பிட்ச்-கள் தார் ரோட்டை போல பேட்டிங்கிற்கு உதவுவதாக விமர்சனங்கள் எழுந்த சூழலில் தற்போது இந்தியா மீதும் விமர்சனங்கள் தொடங்கின.

டி20 தொடர்
டி20 கிரிக்கெட்டிலும் பெரும்பாலும் பேட்டிங்கிற்கு சாதகமான களங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கேற்றார் போலவே இந்தியாவின் அதிரடி வீரர்களும் வெளுத்து வாங்குகின்றனர். அடுத்ததாக வரவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலாவது இது சரிசெய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications