"98-தான்.. சச்சினின் 100 சதங்களை விராட் கோலி தொட முடியாது".. ஆகாஷ் சோப்ரா அதிரடி கணிப்பு
மும்பை: கிரிக்கெட் உலகின் 'ரன் மெஷின்' விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் உலக சாதனையை முறியடிக்க முடியாது என்றும், அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை 98 சதங்களுடன் தான் முடிப்பார் என்றும் இந்திய முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா அதிரடியாக கணித்துள்ளார்.
சமூக வலைதள நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஆகாஷ் சோப்ராவிடம், "விராட் கோலி ஓய்வு பெறும்போது எத்தனை சதங்களை அடித்திருப்பார்?" என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் "98 சதங்கள்" என்று ஆகாஷ் சோப்ரா பதிலளித்தார். விராட் கோலி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 86 சதங்களை விளாசியுள்ளார். சச்சினின் 100 சதங்கள் சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னும் 15 சதங்கள் தேவைப்படுகின்றன.

சச்சின் டெண்டுல்கர் 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி 100 சதங்களை (டெஸ்டில் 51, ஒருநாளில் 49) பதிவு செய்துள்ளார். மறுபுறம் விராட் கோலி 564 போட்டிகளில் 86 சதங்களை (ஒருநாளில் 55, டெஸ்டில் 30, டி20-யில் 1) அடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள்:
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 100 சதங்கள்
விராட் கோலி (இந்தியா) - 86 சதங்கள்
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 71 சதங்கள்
குமார் சங்கக்காரா (இலங்கை) - 63 சதங்கள்
ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) - 62 சதங்கள்
ஜோ ரூட் (இங்கிலாந்து) - 61 சதங்கள்
கோலி மேலும் 12 சதங்கள் மட்டுமே அடிக்க வாய்ப்புள்ளது என்றும், சச்சினின் 100 சதங்கள் சாதனையை அவர் எட்ட மாட்டார் என்றும் சோப்ரா கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
பும்ராவுக்கு அடுத்த சிறந்த பந்துவீச்சாளர் யார்?
ஜஸ்பிரித் பும்ராவைத் தவிர ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் யார் என்ற கேள்விக்கு அர்ஷ்தீப் சிங்கின் பெயரை ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டினார். அர்ஷ்தீப் சிங் சர்வதேச டி20 போட்டிகளில் 94 ஆட்டங்களில் 140 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் முதன்மை பந்துவீச்சாளராக உள்ளார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் 18 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளதால், 2027 உலகக்கோப்பை அணியில் அவரது இடம் இன்னும் உறுதியாகவில்லை என்பதை சோப்ரா நினைவு கூர்ந்தார்.
ஹர்திக் பாண்டியா - இந்திய அணியின் தலைவலி
இந்திய ஒருநாள் அணியின் மிகப்பெரிய பலவீனம் எது என்ற கேள்விக்கு பதிலளித்த சோப்ரா, ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி தான் மிகப்பெரிய கேள்விக்குறி என்றார். "ஹர்திக் பாண்டியா உடற்தகுதியுடன் விளையாடவில்லை என்றால் இந்தியா என்ன செய்யும்?" என்று அவர் கவலை தெரிவித்தார்.
கடந்த மார்ச் 8 அன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி மற்றும் 2026 ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா எந்தவொரு போட்டியிலும் ஆடவில்லை. காயம் காரணமாக ஆஸ்திரேலியா ஏ தொடரிலிருந்து விலகிய அவர், நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. பாண்டியா வரும் நவம்பர் மாதம் பரோடா அணிக்காக சையத் முஷ்டாக் அலி தொடரில் தான் மீண்டும் களம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

