தோனி ஒழுங்காவே ஆடலை.. அவருக்கு இடம் கொடுத்தது தப்பு.. முன்னாள் வீரர் பரபர சர்ச்சை பேச்சு!
மும்பை : முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தோனிக்கு பத்தாண்டுகளுக்கான சிறந்த ஐசிசி டி20 அணியில் தோனிக்கு இடம் அளிக்கப்பட்டதை விமர்சனம் செய்துள்ளார்.
தோனி டி20 போட்டிகளில் சரியாக ஆடாத நிலையில் அவருக்கு ஏன் சிறந்த டி20 அணியில் இடம் அளித்து இருக்கிறார்கள் என அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சிறந்த அணி
2011 முதல் 2020 வரையிலான பத்து ஆண்டு காலகட்டத்தில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்ட அணிகளை ஐசிசி அமைப்பு கடந்த வாரம் அறிவித்தது. அதில் ஒருநாள் அணி மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக தோனியும், டெஸ்ட் அணி கேப்டபாக விராட் கோலியும் இடம் பெற்றனர்.

விமர்சனம்
முற்றிலும் இந்திய வீரர்கள் கேப்டன் பதவிகளை ஆக்ரமித்த நிலையில் அணிகளிலும் அதிக அளவில் இந்திய வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். இது பற்றி பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் ஆகாஷ் சோப்ரா தோனிக்கு டி20 அணியில் இடம் அளிக்கப்பட்டதை விமர்சனம் செய்துள்ளார்.

தோனி செயல்பாடு
இந்த பத்தாண்டு காலகட்ட டி20 அணியை எடுத்துக் கொண்டால் இந்திய அணி உலகக்கோப்பை வெல்லவும் இல்லை. தோனியும் அந்த அளவுக்கு டி20 போட்டிகளில் செயல்படவில்லை. நாம் டி20 அணியை தேர்வு செய்கிறோம் அதில் ஜோஸ் பட்லர் போன்ற வீரர்கள் இடம் பெறவில்லை என தன் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

தேர்வு செய்யவில்லை
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் அதிரடி வீரராக வலம் வருகிறார். தோனிக்கு பதிலாக சிறந்த வீரரான அவரை ஏன் தேர்வு செய்யவில்லை என்பதையே இவ்வாறு கேட்டுள்ளார் ஆகாஷ் சோப்ரா. ஐசிசி இந்த விமர்சனங்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை.


Click it and Unblock the Notifications