2027 உலகக்கோப்பை செமி பைனல் போகும் 4 அணிகள் இதுதான்.. இந்த 2 அணிகளும் போகாது.. ஆரோன் பின்ச் கணிப்பு
மெல்போர்ன்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எவை என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் 14-வது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2027 அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கு இன்னும் ஒரு ஆண்டே உள்ள நிலையில், அரையிறுதிக்குத் தகுதிபெறும் அணிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகளை ஆரோன் பின்ச் தேர்வு செய்துள்ளார்.

ஐசிசி தொடர்களில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நியூசிலாந்து அணியை ஆரோன் பின்ச் தனது பட்டியலில் சேர்க்காமல் விட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015, 2019 உலகக்கோப்பை தொடர்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய நியூசிலாந்தை அவர் தேர்ந்தெடுக்கவில்லை.
அதே போல பாகிஸ்தான் அணியை சில முன்னாள் வீரர்கள் அரையிறுதி போக வாய்ப்பு உள்ள அணியாக கூறுவார்கள். ஆனால், 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பைக்கு பின் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அந்த அணியை ஆரோன் பின்ச் கண்டுகொள்ளவில்லை.
தனது கணிப்பு குறித்துப் பேசிய ஆரோன் பின்ச், "ஹாரி புரூக் தலைமையில் இங்கிலாந்து அணி நடுவரிசையில் சுழற்பந்தை திறம்பட எதிர்கொண்டு அதிரடியாக விளையாடுகிறது. தென் ஆப்பிரிக்க அணிக்கு சொந்த மண் சூழல் கூடுதல் பலம் சேர்க்கும். அவர்களிடம் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களும், திறமையான சுழற்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். அனுபவமும் இளமையும் கலந்த அச்சுறுத்தும் பேட்டிங் வரிசை அவர்களிடம் உள்ளது. அதேபோல் 6 முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவும், பலம் வாய்ந்த இந்திய அணியும் எளிதாக அரையிறுதிக்குச் செல்லும்" என்று கூறினார்.
இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் அக்டோபர் 7-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 11-ஆம் தேதி (உள்ளூர் நேரப்படி அக்டோபர் 10) ஜோகன்னஸ்பர்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதே மைதானத்தில் நவம்பர் 21-ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications

