ஏபிடி-யுடன் மனக்கசப்பு.. பேச மறுத்த விராட் கோலி.. யூட்யூப் வீடியோவால் வந்த வினை.. என்ன நடந்தது?
மும்பை: முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ், விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்ற தகவலை ஒரு யூடியூப் வீடியோவில் வெளியிட்டார். அதனால் கோலி தன்னிடம் பேசாமல் தவிர்த்ததாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம், ஒரு யூடியூப் நேரலையின் போது, அனுஷ்கா தனது இரண்டாவது குழந்தையுடன் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவலை ஏபி டி வில்லியர்ஸ் தவறுதலாக வெளியிட்டுவிட்டார். விராட் கோலி மற்றும் அனுஷ்கா இருவரும் கர்ப்பம் குறித்த செய்தியை ரகசியமாக வைத்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஒரு பெரிய செய்தியாக அமைந்தது.

இந்த விவகாரம் குறித்து ஏபி டி வில்லியர்ஸ் தற்போது வெளிப்படையாகப் பேசியுள்ளார். கோலி கோபமடைந்து தன்னை பல மாதங்களாகப் புறக்கணித்ததாக அவர் கூறியுள்ளார். பின்னர் சில மாதங்கள் கழித்து அவர் பேசியதாகவும், கடந்த ஆறு மாதங்களாக தொடர்பில் இருப்பதாகவும் கூறி இருக்கிறார். "நாங்கள் இருவரும் ஒரே படகில் இருந்தோம் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் நாங்கள் அந்த விவகாரத்தை பற்றி சமீபத்தில் பேசினோம்.
கடந்த ஆறு மாதங்களாக அவர் என்னுடன் தொடர்பில் இருந்துள்ளார். நல்ல வேளை, ஏனென்றால் அவர்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்திருந்தபோது அதை வெளியிட்டு நான் தவறு செய்தேன்," என்று ஏபி டி வில்லியர்ஸ் கூறினார்.
"அதனால் அவர் மீண்டும் என்னுடன் பேசத் தொடங்கியபோது நான் மிகவும் நிம்மதியடைந்தேன். அவர் ஒரு கடினமான காலகட்டத்தில் இருந்தார். மேலும் தனது வாழ்க்கையின் சில தருணங்களை எப்படி சமாளிப்பது என்பது குறித்து என்னுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்பினார்," என்று ஏபி டி வில்லியர்ஸ் மேலும் கூறினார்.
"நான் அவருக்கு 100 சதவீதம் ஆதரவளித்தேன். அவருக்கு ஒரு அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை அமைந்தது. அவர் கடைசி பந்து வரை தனது கிரிக்கெட்டை அனுபவிக்க நான் விரும்புகிறேன். அதுவே அவருக்கு அடுத்த கட்டமாக இருந்தால், அது சிறந்தது, நான் அவருக்குப் பின்னால் ஆதரவாக இருக்கிறேன்," என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications