இஸ்லாமாபாத்: உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி கேப்டனாக சாகித் அப்ரடியை நியமிக்க வேண்டும் என்று அந்த அணியின் மூத்த ஆட்டக்காரர் அப்துல் ரசாக் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அப்துல் ரசாக் தற்போது இங்கிலாந்தில் லீக் போட்டிகளில் பங்கேற்று ஆடி வருகிறார். இந்நிலையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் அப்ரடியை பாகிஸ்தான் கேப்டனாக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

"தற்போதுள்ள சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு கேப்டனாக அப்ரடி சரியான தேர்வாக இருக்க முடியும். டெஸ்ட் போட்டியில் இருந்து ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்கள் வேறுபட்டவை என்பதை உணர வேண்டும். டெஸ்டில் சிறப்பாக செயல்படும் கேப்டனால் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியும் என்று நினைக்கவில்லை.
தற்கால கிரிக்கெட்டில் அதி வேகமாக முடிவெடுத்து நேர்மறையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இதை அப்ரடியால்தான் செய்ய முடியும் என்று கருதுகிறேன். 2011ல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து அப்ரடி நீக்கப்பட்டதற்கு சொல்லிக்கொள்ளும்படியான காரணம் எதுவும் இல்லை. எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இப்போதாவது தனது தவறை திருத்திக்கொண்டு, உலக கோப்பைக்கு முன்பாக அப்ரடியை கேப்டனாக்க வேண்டும்.
நான் முழு உடல் தகுதியோடு இருந்தும்கூட பாகிஸ்தான் அணியில் என்னை சேர்ப்பது குறித்து கிரிக்கெட் வாரியம் பரிசீலனை செய்யவில்லை. இதற்காக நான் என்னை அணியில் சேர்த்தேயாக வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது". இவ்வாறு அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.