IND vs ENG: சாய் சுதர்சன் இடத்திற்கு ஆப்பு.. பெரிய இன்னிங்ஸ் ஆடிய அபிமன்யூ ஈஸ்வரன்
லண்டன்: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு முன்னோட்டமாக இந்திய அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக மூன்று அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல் அபாரமாக சதம் அடித்தார். இதனால் முதலில் இந்திய அணி 348 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து லயன்ஸ் அணி அபாரமாக விளையாடிய நிலையில் சிஎஸ்கே வீரர் கலில் அகமது அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனால் அந்த அணி 327 ரன்களில் சுருண்டது. இதனை அடுத்து 19 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. இதில் தொடக்க வீரராக விளையாடிய ஜெய்ஷ்வால் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்த தருணத்தில் மூன்றாவது வீரராக விளையாடிய கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் இன்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.
ராகுலுடன் ஜோடி சேர்ந்து இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டார். 92 பந்துகளை எதிர்கொண்ட அவர் அபிமன்யு ஈஸ்வரன் 80 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகள் அடங்கும். மறுபுறம் கேஎல் ராகுல் 64 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இதைப் போன்று நடுவரிசையில் நிதிஷ் குமார் ரெட்டி 42 ரன்களும், சர்துல் தாக்கூர் 34 ரன்கள் எடுக்க 74 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்திருக்கிறது.
இந்த தருணத்தில் மூன்றாவது வீரராக சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது அபிமன்யூ ஈஸ்வரன் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு 80 ரன்கள் விளாசினார். இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. இதனால் சாய் சுதர்சன் தமது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படலாம்.


Click it and Unblock the Notifications