கொல்கத்தா: இந்திய டெஸ்ட் அணியில் கடந்த 4 ஆண்டுகளாக இடம்பிடித்தும், ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார் பெங்கால் அணியை சேர்ந்த வீரர் அபிமன்யு ஈஸ்வரன். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், தன் மகனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து அபிமன்யுவின் தந்தை ரங்கநாதன் ஈஸ்வரன் கொந்தளித்துப் பேசியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சாய் சுதர்சன் எடுத்த ஸ்கோர்களை சுட்டிக் காட்டி இதற்கு பதிலாக தன் மகனை ஆட வைத்திருக்கலாம் என அவர் கடுமையாக பேசி இருக்கிறார். ரங்கநாதன் தமிழர் தான் எனும் நிலையில், மற்றொரு தமிழக வீரரின் வாய்ப்பை அவர் தனது மகனுக்காக விமர்சித்து இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அபிமன்யுவின் தந்தை ரங்கநாதன், சாய் சுதர்சனின் ஆட்டத்தை புள்ளிவிவரங்களுடன் கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:
"நம்பர் 3 இடத்தில் என் மகனை இறக்கி இருக்கலாம். சாய் சுதர்சன் மீது எனக்கு எந்தத் தனிப்பட்ட வருத்தமும் இல்லை, அவர் எனக்குத் தெரிந்தவர்தான். ஆனால், அவர் அடித்த ரன்கள் என்ன? 0, 31, 0, 61... இந்த ஸ்கோர்களுக்குப் பதிலாக, என் மகன் அபிமன்யுவை அவர்கள் முயற்சி செய்திருக்கலாம். கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற புற்கள் நிறைந்த ஆடுகளங்களில் 30% போட்டிகளில் விளையாடிய அனுபவம் என் மகனுக்கு உண்டு. வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் அவனிடம் அதிகம். நீண்ட நேரம் களத்தில் நின்று இன்னிங்ஸைக் கட்டமைக்கும் வீரர் அபிமன்யு என்பது சாதனைகளே சொல்லும்," என்று காட்டமாகத் தெரிவித்தார்.
சாய் சுதர்சனை மட்டுமல்லாது, அணியில் விளையாடிய கருண் நாயரையும் அவர் விட்டுவைக்கவில்லை. "கருண் நாயர் எப்போதும் உள்ளூர் போட்டிகளில் 4 அல்லது 5வது வரிசையில்தான் விளையாடுவார். அவரை எப்படி திடீரென்று நம்பர் 3ல் களமிறக்கினீர்கள்? 4, 5ம் இடங்களில் ஆடும் வீரர்கள் எல்லாம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக மாறிவிடுகிறார்கள். ஆனால் என் மகன் ஒரு ஸ்பெஷலிஸ்ட் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். அவனால் தொடக்க வீரராக மட்டுமே ஆட முடியும்," என்று அணி நிர்வாகத்தின் தேர்வைக் கேள்விக்குள்ளாக்கினார்.
இருப்பினும், இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தன் மகனுக்கு நம்பிக்கை கொடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். "கௌதம் கம்பீர் என் மகனிடம் பேசியபோது, 'நீ சரியான பாதையில்தான் செல்கிறாய். உனக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். நான் ஒன்று, இரண்டு போட்டிகளோடு உன்னை அணியிலிருந்து நீக்கும் ஆள் இல்லை. உனக்கு நீண்ட வாய்ப்பு கொடுப்பேன்' என்று உறுதியளித்துள்ளார். என் மகன் கடந்த 4 ஆண்டுகளாகக் காத்திருக்கிறான். அவனது 23 வருட கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்," என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் 103 போட்டிகளில் விளையாடியுள்ள அபிமன்யு ஈஸ்வரன், 48.70 என்ற அபாரமான சராசரியுடன் 27 சதங்கள் உட்பட 7841 ரன்கள் குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.