விக்கெட் கீப்பர் யார்? விடை தெரியாத கேள்விக்கு பதில் அளித்த டெல்லி அணி.. அபிஷேக் போரல் ஒப்பந்தம்!
டெல்லி: காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் பங்கேற்காததால், அவருக்கு பதிலாக பெங்கால் ரஞ்சி அணிக்காக விளையாடிய அபிஷேக் போரலை டெல்லி அணி நிர்வாகம் விக்கெட் கீப்பராக ஒப்பந்தம் செய்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் இரு நாட்களே உள்ளது. ஆனால் வங்கதேசம், இலங்கை, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், இன்னும் அணிகளுடன் இணையவில்லை.
அதேபோல் காயமடைந்த வீரர்களுக்கான மாற்று வீரர்களையும் அணி நிர்வாகங்கள் தேடி வருகின்றன. குறிப்பாக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து குணமடையவில்லை.

ரிஷப் பண்ட் காயம்
இதனால் டெல்லி அணிக்கு கேப்டனாக டேவிட் வார்னர் செயல்படவுள்ளார். அதேபோல் ரிஷப் பண்ட்-க்கு பதிலாக யார் விக்கெட் கீப்பிங் செய்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் கே.எஸ்.பரத் டெல்லி அணியில் இருந்து கடந்த மினி ஏலத்தில் விடுவிக்கப்பட்டார். மினி ஏலம் முடிவடைந்த சில நாட்களில் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியதால், டெல்லி அணியின் விக்கெட் கீப்பராக யார் செயல்படுவார்கள் என்பது தெரியாம இருந்தது.

யார் இந்த அபிஷேக் போரல்?
இதனிடையே சர்ஃபராஸ் கான் விக்கெட் கீப்பங் செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், சர்ஃபராஸ் கான் குறித்து எதுவும் உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் பெங்கால் ரஞ்சி அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்த 20 வயதே ஆகும் அபிஷேக் போரலை டெல்லி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதுவரை 16 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் போரல், 6 அரைசதம் அடித்துள்ளதோடு 30.21 சராசரியுடன் பேட்டிங் செய்யக் கூடிய வீரராவார்.

டெல்லி அணியின் திட்டம்
அபிஷேக் போரல் குறித்து டெல்லி அணி நிர்வாகம் கூறுகையில், ரிஷப் பண்ட் காயம் காரணமாக அணியுடன் இல்லாததால், எங்கள் அணியின் முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பராக அபிஷேக் போரலும், இரண்டாம் சாய்ஸ் விக்கெட் கீப்பராக சர்ஃபராஸ் கானும் செயல்பட உள்ளனர். இவர்கள் இருவருக்குமான திட்டங்களை சரியாக வகுத்துள்ளோம். நேரம் வரும் போது இருவரையும் பயன்படுத்திக் கொள்வோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்பேக்ட் பிளேயர் விதிமுறை
சில நாட்களுக்கு முன் டெல்லி அணியுடன் இணைந்த சர்ஃபராஸ் காப்ன், விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் நடப்பு ஐபிஎல் தொடரில் இன்பேக்ட் பிளேயருக்கான விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதால், சர்ஃபராஸ் கானை பேட்ஸ்மேனாகவும், அபிஷேக் போரலை விக்கெட் கீப்பராகவும் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications