அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியின் அடித்தளமாக அமைந்தது தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டம் தான். தொடர் முழுவதும் ரன் குவிக்கத் தடுமாறி வந்த அவர், இறுதிப்போட்டியில் மட்டும் எப்படி இவ்வளவு சிறப்பாக விளையாடினார் என்ற கேள்விக்கு, தற்போது ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
2026 டி20 உலகக் கோப்பை தொடரில், தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அபிஷேக் சர்மா மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தொடரின் தொடக்கத்தில் அவர் ஹாட்ரிக் டக் அவுட் ஆகி பெரும் விமர்சனங்களைச் சந்தித்தார். அரையிறுதிப் போட்டிக்கு முன்பாகவே அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. இருப்பினும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவர் மீது வைத்த நம்பிக்கையின் காரணமாக இறுதிப்போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இறுதிப்போட்டியில் களமிறங்குவதற்கு முன்பு, தனது சக வீரர் சிவம் துபேவிடம் பேட் கேட்டு அபிஷேக் சர்மா பெற்றுள்ளார். இது குறித்துப் பேசிய சிவம் துபே, "ஆமாம், அபிஷேக் என்னிடம் வந்து பேட் கடன் கேட்கலாமா? என்று கேட்டான். நான் உடனே 'தாராளமாக எடுத்துக்கொள்' என்று கொடுத்துவிட்டேன். இறுதிப்போட்டியில் அவன் அந்த பேட்டை வைத்து ரன் குவித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தனது மோசமான பார்ம் குறித்துப் பேசிய அபிஷேக் சர்மா, "பயிற்சியாளர் மற்றும் கேப்டன் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், உண்மை என்னவென்றால், எனக்கே என் மீது சந்தேகம் இருந்தது. என் கிரிக்கெட் வாழ்க்கையில் இவ்வளவு மோசமான ஒரு கட்டத்தை நான் பார்த்ததே இல்லை. இது எனது முதல் உலகக் கோப்பை என்பதால் அந்த அழுத்தம் அதிகமாகவே இருந்தது. ஆனால், இந்த அணியில் உள்ள ஒவ்வொருவரும், 'நீ ஒரு பெரிய ஆட்டத்தை வென்று தருவாய்' என்று எனக்குத் தொடர்ந்து நம்பிக்கை அளித்துக் கொண்டே இருந்தனர்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
"நான் எனது வழக்கமான பயிற்சிகளைச் செய்து வந்தேன். ஒரு இளம் வீரராக, இந்திய அணியில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே அனுபவம் கொண்ட எனக்கு, இந்தத் மோசமான கட்டத்தைக் கையாள்வது எளிதாக இல்லை. ஆனால், அந்த இக்கட்டான காலக்கட்டத்தில் இந்த அணி என்னை நடத்திய விதம் எனக்குப் பெரும் நெகிழ்ச்சியைத் தந்தது. நான் இதுவரை எந்த அணியிலும் இப்படி ஒரு ஆதரவை உணர்ந்ததில்லை" என்று அவர் தனது சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இறுதிப்போட்டியில் சிவம் துபேவின் பேட்டைப் பயன்படுத்திய அபிஷேக் சர்மா, வெறும் 21 பந்துகளில் 52 ரன்களைக் குவித்து இந்திய அணி 255 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எடுக்க முக்கிய அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.