அபிஷேக் சர்மா செய்த செயல்.. சாட்டையை எடுத்த பிசிசிஐ.. தவறான வார்த்தை.. விதிமீறலால் தண்டனை
மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு வித்திட்ட தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவுக்கு பிசிசிஐ அதிரடியாக அபராதம் விதித்துள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் இந்தப் போட்டியின் போது தகாத வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது. அதற்காகவே இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 48 ரன்கள் குவித்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். அவரது இந்த அதிரடி ஆட்டம் அந்த அணி 226 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

இந்தப் போட்டியின் போது அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. வருண் சக்கரவர்த்தி பிடித்த கேட்ச் தரையோடு தரையாக இருந்ததால் அது சரியான கேட்ச் தானா? என்ற கேள்வி இருந்தது. எனினும், மூன்றாவது அம்பயர் சரியான ஆதாரம் இல்லாத நிலையில் அது கேட்ச் தான் என அறிவித்தார். இதை அடுத்து அபிஷேக் சர்மா பெரும் ஏமாற்றத்துடன் வெளியேறினார். அப்போது அவர் அதிருப்தியுடன் வெளியேறினார்.
அப்போது அபிஷேக் சர்மா பயன்படுத்திய வார்த்தைகள் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறி இருந்ததாக போட்டி நடுவர் கண்டறிந்துள்ளார். இதற்காக அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு ஒரு 'டிமெரிட்' புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.3-ன் கீழ் அவர் செய்தது தவறு என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தண்டனையை அபிஷேக் சர்மா ஏற்றுக்கொண்டார்.
ஏன் இந்த தண்டனை?
பிரிவு 2.3 என்பது பொதுவாக மைதானத்தில் வீரர்கள் பயன்படுத்தும் தகாத வார்த்தைகள் அல்லது ஆபாசமான மொழியைப் பயன்படுத்துவதைக் குறிப்பதாகும். ஸ்டம்ப் மைக்கில் பதிவாகும் விதத்திலோ அல்லது மைதானத்தில் இருக்கும் பார்வையாளர்களுக்குக் கேட்கும் வகையிலோ தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு வீரர் தனது சொந்த ஆட்டத்தின் மீதான விரக்தியில் கத்தினாலும் அல்லது எதிரணி வீரர்களை நோக்கிப் பேசினாலும் அது இந்த விதியின் கீழ் வரும். அபிஷேக் சர்மா ஆட்டத்தின் போது இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியதே இந்த அபராதத்திற்கு முக்கிய காரணமாகும்.
இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.3 ஓவர்களில் 82 ரன்கள் சேர்த்தது. ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் ஜெய்தேவ் உனத்கட் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த சீசனின் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம், தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்த கொல்கத்தா அணி 9வது இடத்தில் தவிக்கிறது. அதிரடி வீரர் அபராதத்திற்கு உள்ளாகியுள்ளது ஹைதராபாத் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications