மும்பை: இந்திய அணிக்காக தன்னை தயார் செய்து, அதிரடி ஆட்டம் ஆட வைத்தது கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ் சிங் தான் எனவும், அவர் தான் தன்னை அடையாளம் கண்டு முதன் முதலாக இந்திய அணிக்காக ஆடுவாய் எனக் கூறினார் என அபிஷேக் சர்மா உருக்கமாக பேசி இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம் ஆடி உலக அளவில் நான்காவது அதிவேக சதத்தை அடித்திருந்தார். வெறும் 37 பந்துகளில் அவர் சதம் அடித்து இருந்தார். அவரது ஆட்டத்தால் இந்திய அணி 247 ரன்கள் குவித்தது.

அபிஷேக் சர்மா 18-வது ஓவர் வரை களத்தில் நின்று 54 பந்துகளில் 135 ரன்கள் சேர்த்து இருந்தார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் அபிஷேக் சர்மா தனது ஆட்டம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அப்போது யுவராஜ் சிங் தனது கிரிக்கெட் வாழ்வில் எத்தனை பெரிய தாக்கத்தையும், உதவிகளையும் செய்திருக்கிறார் என குறிப்பிட்டு நெகிழ்ந்தார்.
மேலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் சதம் அடிக்க செய்த ஒரு உதவியும் சுட்டி காட்டி நன்றி தெரிவித்தார். அபிஷேக் சர்மா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசியதாவது - "யுவராஜ் சிங் தான் என்னை முதலில் நம்பினார். இது எல்லாமே யுவராஜ் சிங்கால் தான். அவர் என்னை நடத்திய விதம் மற்றும் என்னை தயார் செய்த விதம் ஆகியவை மிகச் சிறப்பானது. அவர் எப்போதும் எனக்காக இருப்பார்."
"நீ இந்திய அணிக்காக ஆடி போட்டிகளை வெல்லும் வீரராக இருப்பாய்." என யுவராஜ் சிங் போன்ற ஒருவர் சொல்லும் போது, அது எனது தன்னம்பிக்கையை பல மடங்கு அதிகரிக்க செய்தது. மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே யுவராஜ் சிங் என்னை நம்பினார். அப்போதே என்னிடம், "நீ நாட்டுக்காக விளையாடுவாய்." என்றார்."
"ஒவ்வொரு போட்டிக்குப் பின்னரும் நான் அவரிடம் பேசுவேன். அவர் சொல்லும் விஷயங்களை கேட்டுக் கொள்வேன். என்னை விட அவருக்கு அதிகமாக கிரிக்கெட் தெரியும்." என்றார் அபிஷேக் சர்மா. மேலும், ஐந்தாவது போட்டியில் சதம் அடிக்கும் முன்பு விக்கெட்கள் வீழ்ந்த போது சில பந்துகளை எடுத்துக்கொண்டு உனது சதத்தை நிறைவு செய் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனக்கு ஆதரவளித்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.
இது பற்றி அபிஷேக் சர்மா பேசுகையில், "நான் 90 ரன்கள் அடித்து இருந்தபோது சில விக்கெட்டுகள் வீழ்ந்தன. அப்போது சூர்யகுமார் யாதவ் என்னிடம், "நீ இரண்டு, மூன்று பந்துகளை எடுத்துக் கொண்டு சதத்தை நிறைவு செய்து கொள்" என்றார். என்னை எப்போதும் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆதரித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்." என்று கூறினார்.