ரசிகையின் கையில் ஆட்டோகிராஃப் போட்ட அபிஷேக் சர்மா: டாட்டூவாக மாற்ற துடிக்கும் தீவிர பெண் ரசிகை!
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டிக்கு முன்னதாக, பெல்ஃபாஸ்டில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவைப் பார்த்த பெண் ரசிகை ஒருவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அதிரடி பேட்டரான அபிஷேக் சர்மாவைக் கண்டதும் துள்ளிக்குதித்த அவர், தனது கையை நீட்டி ஆட்டோகிராஃப் தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அபிஷேக் ஷர்மா அந்தப் பெண்ணின் கையில் ஆட்டோகிராஃப் கையெழுத்திட்டு அவரது நாளை மறக்க முடியாததாக மாற்றினார். அந்தப் பெண், தனது கையில் அபிஷேக்கின் கையெழுத்தை டாட்டூவாக (Tattoo) குத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். "நான் டாட்டூ குத்த விரும்புகிறேன், அதனால் என் கையில் கையெழுத்திட முடியுமா?" என்று அவர் கேட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இதற்கிடையில், பெல்ஃபாஸ்டில் உள்ள சிவில் சர்வீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அயர்லாந்து அணி நிர்ணயித்த 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 148 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனால், சர்வதேச ஆண்கள் கிரிக்கெட் வரலாற்றில் அயர்லாந்து அணியிடம் இந்திய அணி தனது முதல் தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 49 ரன்கள் குவித்து அதிரடி காட்டினாலும், அது தோல்வியில் முடிந்தது. இந்தத் தொடரின் இறுதி டி20 போட்டி, வரும் ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
தோல்வி குறித்து அபிஷேக் சர்மா பேச்சு
முதல் டி20 போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு பேசிய அபிஷேக் சர்மா, மைதானத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்திய அணி வீரர்கள் விரைவாக தங்களை மாற்றிக்கொள்வது மிகவும் முக்கியம் என்று வலியுறுத்தினார். பயிற்சிப் போட்டிகளின் போது இதற்காக தாங்கள் உழைத்ததாகவும், ஆனால் முதல் போட்டியில் அது சரியாக அமையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகங்களுடனான உரையாடலின் போது பேசிய அபிஷேக் சர்மா "மைதானத்தின் சூழலுக்கு நாம் எவ்வளவு விரைவாக பழகுகிறோம் என்பது ஒரு அணியாக மிகவும் முக்கியமானது. ஏனெனில், அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடும்போது, ஒரு குழுவாக நாம் முன்னெடுத்து சூழ்நிலைகளுக்கு ஏற்ப பழக வேண்டும். ஒரு ஆதிக்கம் செலுத்தும் அணியாக நாம் மிக விரைவாக மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இன்று நாங்களும் அதைத்தான் செய்ய முயற்சித்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை," என்றார்.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்திய அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த வெள்ளைப் பந்து தொடர், ஜூலை 1 புதன்கிழமை அன்று டி20 போட்டியுடன் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications


