அபிஷேக் சர்மா 30 பந்தில் செஞ்சுரி... மெகா உலக சாதனை.. அரண்டு போன ஆப்கானிஸ்தான் வீரர்கள்
டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா வெறும் 30 பந்துகளில் சதம் விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒரு நாட்டின் பேட்ஸ்மேன் சர்வதேச டி20 போட்டியில் அடித்த அதிவேக சதமாக இது பெரும் சாதனையாக மாறி உள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிக்ஸர் மழையைப் பொழிந்த அபிஷேக், வெறும் 16 பந்துகளில் அரைசதம் கடந்தார். முதல் 6 ஓவர்கள் கொண்ட பவர்பிளே முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் குவித்த போது, அதில் அபிஷேக் சர்மா மட்டுமே 22 பந்துகளில் 76 ரன்களை விளாசியிருந்தார். இவரது அசுர வேக பேட்டிங் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களை நிலைகுலைய வைத்தது.

அப்துல்லா அகமத்சாய் வீசிய பந்தை தட்டிவிட்டு 30 பந்துகளில் தனது 3-வது சர்வதேச டி20 சதத்தை அவர் நிறைவு செய்தார். சதம் அடித்ததும் தனது ஹெல்மெட்டைக் கழற்றி, மைதானத்தில் தரையில் அமர்ந்து தியானம் செய்வது போன்ற போஸ் கொடுத்து விநோதமாகக் கொண்டாடினார். இதைக் கண்ட அவரது தந்தை நெகிழ்ச்சியுடன் கைதட்ட, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் முகமெல்லாம் புன்னகையுடன் எழுந்து நின்று பாராட்டினார்.
சர்வதேச டி20 வரலாற்றில் எஸ்தோனியா அணியின் சாஹில் சவுகான் 27 பந்துகளில் சதம் அடித்து அதிவேக சதம் அடித்தவராக இருக்கிறார். அடுத்து துருக்கி அணியின் முகமது ஃபஹத் 29 பந்துகளில் சதம் அடித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர்களுக்கு அடுத்தபடியாக ஒட்டுமொத்தமாக 3-வது அதிவேக சதமாகவும், டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளில் அதிவேக சதம் ஆகவும் அபிஷேக் சர்மாவின் இந்த சதம் இடம் பெற்றுள்ளது.
சதம் அடித்த பின் அபிஷேக் சர்மா 34 பந்துகளில் 9 பவுண்டரிகள், 11 சிக்ஸர்களுடன் 108 ரன்கள் குவித்து ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சனுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவர்களில் 142 ரன்கள் குவித்து இமாலய அடித்தளம் அமைத்தார். 317.65 என்ற மிரட்டல் ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் விளாசிய இந்த இன்னிங்ஸ் சர்வதேச அரங்கில் புதிய மைல்கல்லாகும். அபிஷேக் சர்மாவின் இந்த ஆட்டம், டெல்லி மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியது.


Click it and Unblock the Notifications

